உலகின் அரபுலகச் செல்வந்தப் பட்டியலில் முதல் 50 பேர்களில் 30 பேர் சவூதி அரேபியர்கள் என்று தெரியவந்துள்ளது. ஞாயிறன்று வெளியிடப்பட்ட அரபுலகப் பணக்காரர்களில் பட்டியலில் 60 சதவீதத்தினர் சவூதி அரேபியர்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அரபுலகின் முதல் 50 செல்வந்தர்களில் 30 பேர் சவூதி அரேபியர்கள் எனவும், இப்பிராந்தியத்தில் அதி உயர் நிகர மதிப்புடைய தனிநபர் செல்வந்தர்கள் (Ultra High Net Worth Individuals) 4,490 உள்ளனராம்.
வட அமெரிக்காவில் இவ்வகை செல்வந்தர்களின் எண்ணிக்கை 62,960 ஆக உள்ளது என்றும், ஐரோப்பாவில் இத்தகையோர் 54,325 பேர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.சவூதியின் வணிகச் சக்ரவர்த்தியான இளவரசர் அல்வலீத் பின் தலால் அல் சவூத் அரபுலக அதி செல்வந்தர்களில் முதலிடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 21.3 பில்லியன் டாலர்கள் என்றும் , ஒட்டுமொத்த அரபுலக அதி செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு 257 பில்லியன் டாலர்கள் என்றும், இது 5 சத முன்னேற்றம் என்றும் கூறப்படுகிறது. இப்பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் அமைதிக்குலைவையும் மீறி இம்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் எம்பிஐ குழுமத்தின் முஹம்மது அல் ஜாபர் $ 12.6 பில்லியன் சொத்துகளைக் கொண்டுள்ளார்.
முதல் ஐம்பது பேரில் ஐக்கிய அரபு அமீரகத்தார் நால்வரும், மூன்று கத்தர் நாட்டவர்களும், மூன்று குவைத்தியர்களும், ஒரே ஒரு எகிப்தியரும் உள்ளனர்.
சவூதியின் ஒலயான் குழுமம் மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துள்ளது. இதன் சொத்துமதிப்பு $12.4 பில்லியன்களாக உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் அரை பில்லியன் டாலர்கள் கூடியுள்ளது.
அல் ஸாஹித் குழுமத்தலைவர் இஸ்ஸாம் அல் ஸாஹித் கடந்த ஆண்டின் 22 ஆம் இடத்திலிருந்து எழும்பிக் குதித்து இவ்வாண்டு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். சொத்து மதிப்பு $10.7 பில்லியன்கள்.
சவூதியின் முஹம்மத் அல் அமூதிக்கு ஐந்தாம் இடம் . சொத்து மதிப்பு $ 10.4 பில்லியன்கள்
குவைத்தின் அல்கராஃபி ஆறாம் இடம் தக்கவைப்பு - சொத்து மதிப்பு $ 8.2 பில்லியன்கள்
கடந்த முறை இருந்த 25 ஆம் இடத்திலிருந்து இம்முறை ஏழாம் இடத்திற்கு வந்துள்ளது குவைத்தின் புகம்ஸீன் குழுமம்.
தனது செல்வ மதிப்பில் 26 சதவீதம் இழப்பு கண்டாலும், எட்டாம் இடத்தில் இருப்பது சவூதியின் பின்லாடன் குழுமம் - சொத்து மதிப்பு $ 7.25 பில்லியன்கள்.
ஜெத்தாவை வணிக மையமாகக் கொண்ட புக்ஸான் குழுமம் ஒன்பதாம் இடத்தில் உள்ளது - சொத்து மதிப்பு $7பில்லியன்கள்.
மத்திய கிழக்கின் செல்வந்தர்கள் என்ற இப்பட்டியலில் இடம் பிடிக்கத் தவறிய வளைகுடா நாடாக பஹ்ரைன் உள்ளது. எனினும் அதன் கானு குழுமத்தார் பஹ்ரைனின் முதன்மை செல்வந்தர்களாக உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக