வெள்ளி, டிசம்பர் 02, 2011

முஸ்லிம்களுக்கு விரைவில் தனி இடஒதுகீடு! சல்மான் குர்ஷித்


புதுடில்லி: முஸ்லிம்களுக்கான தனி இடஒதுகீடு வழங்குவது குறித்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி விரைவில் முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை வெளியிடும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சல்மான் குர்ஷித் நாட்டில் உள்ள இதர பிற்பட்ட
வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும்' மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டில், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டு  விரைவில் அறிவிக்கப்படும். இருந்தாலும், அதற்கான கால வரையறை என்ன என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றார்.

தற்போதைய காங்கிரஸ் அரசின் பதவிக்காலத்தில், இரண்டரை ஆண்டுகாலம் முடிந்து விட்டது. எனவே, மீதமுள்ள காலத்திற்குள், நாங்கள் அளித்த உறுதிமொழிகளை காப்பாற்ற வேண்டும். அதனால், விரைவில் இடஒதுக்கீடு தொடர்பான முடிவு, மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு கொண்டு வரப்படும் என்று சல்மான் குர்ஷித் கூறினார்.
உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வியிடம் கேட்கப்பட்ட போது, நாடாளு மன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே இதுகுறித்து கூறியுள்ளோம். அதை நிறைவேற்ற மத்திய அரசு விரைவாகச் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

முஸ்லிம்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின் தங்கியிருந்ததைக் கருத்தில் கொண்டு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக