வெள்ளி, டிசம்பர் 16, 2011

2015ல் ஆட்டோ உற்பத்தியில் உலகின் 3வது இடத்தில் இந்தியா!

Car Marketவரும் 2015ம் ஆண்டில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் உலகின் 3வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், புதிய முதலீடுகள் மூலம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிதாக 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தை சேர்ந்த நிதி ஆலோசனை நிறுவனமான ரோத்ஸ்சைல்டு ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி சம்பந்தமாக உலக அளவில் ஒரு ஆய்வை நடத்தியது. இதுதொடர்பாக, ரோத்ஸ்சைல்டு நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பிரிவு சர்வதேச தலைவர் விகாஸ் சேகல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விபரங்களை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், வரும் 2015ம் ஆண்டில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 3 இடத்துக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தற்போது இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் முதலீடு 3 மடங்காக அதிகரித்துள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரேசிலுக்கு அடுத்து உலக அளவில் இந்தியா தற்போது 6 வது இடத்தில் உள்ளது.

ஆட்டோத் துறையில் கார், டிரக், ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தி என அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த உற்பத்தி வரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் ஆட்டோ உற்பத்தி 3.5 மில்லியன் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் வரும் 2015ம் ஆண்டில் உலக அரங்கில் அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும்.

மேலும், அனைத்து பன்னாட்டு கார் நிறுவனங்களும் சீனாவில் வேண்டிய அளவு முதலீடு செய்து விட்டதால் அந்த நிறுவனங்களின் கவனம் தற்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இதனால், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 30 மில்லியன் டாலர்கள் முதல் 40 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால், இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிதாக 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், வரும் 2018ம் ஆண்டில் இந்தியாவில் 30 ஆலைகளில் மொத்தம் ஆண்டுக்கு 12 மில்லியன் கார்கள் தயாரிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக