சனி, டிசம்பர் 10, 2011

இஸ்லாமிய வரலாறை திரித்து கூறிய தினமலர்

சென்னை: முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி செய்திகள் வெளியிடுவதில் தமிழ் நாளிதழ்களில் தினமலரை "நம்பர் 1" என்று கூறலாம் அந்தளவிற்கு தொடர்ந்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி வருகிறது.முஸ்லிம்கள் தங்களது உயிரை விட புண்ணியமாக மதிக்கும் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரில் கார்டூனை சில வருடங்களுக்கு முன்பாக வெளியிட்டது. இது முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எத்துனையோ அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தினமலர் கார்டூனை வெளியிட்ட‌ அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இஸ்லாம் பற்றிய செய்திகளை
வெளியிடுகிறோம் என்ற பெயரில் கண்டதை உளறி முஸ்லிம்களை மென்மேலும் புண்படுத்தி வருகிறது.

மொஹர்ரம் மாதத்தில் மூட நம்பிக்கை கொண்ட சிலர் இஸ்லாத்தின் பெயரால் மார்க்கத்திற்கு புரம்பான காரியங்களை செய்து வருகிறார்கள். குறிப்பாக மொஹர்ரம் 10 பிறை அன்று குழி வெட்டி தீ மிதிக்கும் ஒரு வழிமுறையை கையாண்டு வருகின்றனர். இத்தகைய செயல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையன்ற போதிலும் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த செயலுக்கு முஸ்லிம் அல்லாதவர்களும் சென்று பங்கு கொள்கின்றனர். தீ மிதிக்கும் சடங்குகளில் முஸ்லிம் அல்லாதவர்களும் பங்கு கொள்கின்றனர் என்பதனால் மத நல்லிணக்கம் ஏற்படுகிறது என்று கூறி தினமலர் சமீபத்தில் தன் இஷ்டத்திற்கு உளறியுள்ளது. இதற்கு ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களின் தாயான அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் பற்றிய பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.

ஃபாத்திமாவிம் மகன் அசன், உசேன் ஆகிய இருவரும் போர்களத்தில் கொல்லப்பட்ட துக்கத்தை தாங்க முடியாமல் ஃபாத்திமா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் நினைவாகத்தான் முஸ்லிம்கள் மொஹர்ரம் மாதத்தில் தீமிதிக்கும் சடங்கில் ஈடுபடுகின்றனர். என்று செய்தி வெளியிட்டுள்ளது.

"தற்கொலை" செய்து கொண்டால் நிரந்தர நரகம் தான். மாறாக சுவர்க்கம் செல்லவே முடியாது என்று உறுதியான நம்பிக்கை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தில், அதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அருமை மகளாரும், ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தின் தாயுமான அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தீக்குழித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று செய்தி யிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் ஃபாத்திமா ரலி அவர்களோ நபி(ஸல்) அவர்கள் மரணித்து சில வருடங்களுக்குள்ளாகவே அவர்களும் இயற்க்கை முறையில் மரணித்துவிட்டார்கள், அப்பொழுது அவர்களுடைய இரு மகன்களான ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) அவர்கள் சிறுவர்களாக இருந்தார்கள். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டதோ வாலிப பருவத்தில். உண்மை வரலாறு இவ்வாறு இருக்க தன் இஷ்டப்படி கதைகளை அளந்துள்ளது தினமலர்.

ஒரு செய்தி உங்களுக்கு கிடைத்தால் அது உண்மைதானா? என்று உறுதி செய்த பின்னர் அதனை பிறருக்கு தெரிவியுங்கள் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் இன்றைய பத்திரிக்கைகள் அவற்றையெல்லாம் சிந்திப்பதே இல்லை. தன்னுடைய நிருபர் என்ன செய்தி கொண்டுவந்தாலும் அது எந்தளவிற்கு உண்மை என்பதை விசாரிப்பதில்லை. தினமலரின் இத்தகைய செயலை கண்டித்து ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளீர்கள்? என்று கேட்டதற்கு இதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள்? மறுப்பு தெரிவித்து விடுகிறோம்! என்று திமிராக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொரு முறையும் தவறு செய்திவிட்டு மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. முஸ்லிம்கள் பொறுமையை கையாண்டு வருவதால் தான் இவர்கள் இது போன்ற ஈன செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். பொருமைக்கும் எல்லை உண்டு என்ற வாக்கியத்தை தினமலருக்கு நியாபகப்படுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக