வியாழன், டிசம்பர் 01, 2011

சிங்கபூரில் : இந்திய வாலிபருக்கு சிறை, பிரம்படி

பெண்ணிடம் இருந்து கைப்பையைத் திருடிவிட்டு, பின்னர் அவரை மானபங்கம் செய்ய முயன்ற இந்திய நாட்டவருக்கு மூன்று பிரம்படிகளும், ஏழு மாதச் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜூரோங் பாயிண்ட் வணிக மையத்தில் உரையாடிக் கொண்டிருந்த மூன்று பெண்களிடம் சென்று உறவுக்கு வர முடியுமா
என கேட்டுள்ளார் சந்திரசேகரன் வைரக்கண்ணு, 27. அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். உடனே, அவர்களில் ஒருவரின் கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார் சந்திரசேகரன். அவரை விரட்டிப் பிடிக்க அப்பெண்கள் முயன்றனர். அப்படியே அப்பெண்களுக்குப் போக்குக் காட்டி ஓர் ஓரத்திற்குச் சென்றதாகவும், பின்னர் அவர்களுக்கு இடையே கைகலப்பின் போது ஒரு பெண்ணை மானபங்கம் செய்ய சந்திரசேகரன் முயன்றதாகவும் கூறப்பட்டது. திருட்டு மற்றும் மானபங்கம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார் சந்திரசேகரன். அவருக்கு ஏழு மாத சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் விதித்து வட்டார நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்களில் ஒருவருக்கு 36 வயது எனவும், மற்ற இருவருக்கும் 17 வயது எனவும் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது. அன்று இரவு 7.40 மணியளவில் அந்தப் பெண்களிடம் சென்ற சந்திரசேகரன், “ஓர் இரவுக்கு எவ்வளவு?” என வினவியதாக துணை அரசு வழக்கறிர் ஆலன் ஹு தெரிவித்தார். அவரது நடத்தையைக் கண்டு அப்பெண்கள் மூவரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் ஒருவர், சந்திரசேகரனை அவ்விடத்தை விட்டு தள்ளிப் போகுமாறும், அவ்வாறு செய்யாவிடில் போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார். அப்பெண்களில் ஒருவர் தமது கைப்பையை அருகில் இருந்த கற்பாறையின் மீது வைத்திருந்தார். அதை எடுத்துக்கொண்டு ஓடினார் சந்திரசேகரன். பின்னர் அந்தக் கைப்பையை ஒரு புதருக்குள் வீசிவிட்டு அவர் ஓட்டமெடுத்தார். ஆனாலும், பதினேழு வயது நிரம்பிய இரு பெண்கள், சந்திரசேகரனை விரட்டுவதை நிறுத்தவில்லை. அவரைப் பிடித்து, ஓர் உதை கொடுத்துள்ளார் ஒரு பெண். இதனால் தடுமாறிய சந்திரசேகரன் கீழே விழுந்தார். இருந்தாலும், சுதாரித்து எழுந்த சந்திர சேகரன், அவர்களில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக