வியாழன், டிசம்பர் 15, 2011

போராட்டங்களை நிறுத்துங்கள்: மன்மோகன் சிங்

புது தில்லி, டிச. 14: முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான போராட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை வலியுறுத்தினார்.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்திருந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை
விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்த் தேக்கத்தை 120 அடிக்கு குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது. 136 அடிவரை நீர் அளவை வைத்துக்கொள்ள தமிழகத்துக்கு அனுமதி
அளித்தது.இந்நிலையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் அந்த மாநிலத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பிரதமர் மன்மோகன் சிங்கை புதன்கிழமை சந்தித்து முறையிட்டனர். முல்லைப் பெரியாறு தொடர்பாக தங்களது மாநிலத்தின் நிலையை எடுத்துக்கூறியதோடு, இந்த விவகாரத்தில் பிரதமரை உடனே தலையிடுமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.அப்போது இரு மாநிலத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்

.பிரதமரின் இந்த வேண்டுகோளை கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். பிரதமரை சந்தித்தப் பிறகு நடைபெற்ற கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.""முல்லைப் பெரியாறு தொடர்பாக கேரளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைவரும் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்'' என அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் எங்களிடம் உறுதியளித்தார். "இந்தப் பிரச்னை தொடர்பாக கேரளத்தில் நடைபெறும் அனைத்துப் போராட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று பிரதமர் வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொண்டு கேரளத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டங்களை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் செய்து வரும் பிற கட்சியினரும், அமைப்புகளும் போராட்டங்களை நிறுத்துவது அவர்களைச் சார்ந்தது. எனினும் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளதால் அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்துள்ளோம். மத்தியப் படை பாதுகாப்பு: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிப்பது தேவையற்றது. அணைக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது. கேரள மாநில போலீஸாரின் பாதுகாப்பே அணைக்குப் போதுமானது என்றார்.இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸார் கூறுவது அவர்களின் கருத்து. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தீவிர ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் மறு பரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் அவர் கூறினார்."புதிய அணைக்கான இடத்துக்கு தமிழகம் ஒப்புதல் அளித்தது': இதனிடையே, புதிய அணை கட்டுவதற்கான இடத்துக்கு ஒப்புதல் தெரிவித்து இரு மாநிலங்களும் 1979-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளன என்று கேரள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.மனுவில் மேலும் கூறியிருப்பது: கடந்த சில தினங்களாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவு 136 அடிக்கு மேல் உள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கியுள்ளது. நீண்டகாலப் பிரச்னைக்குப் புதிய அணை கட்டுவதே தீர்வாக அமையும். புதிய அணைக்கான முழு விவர ஆய்வு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில அரசும் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய அணை கட்டினாலும் தமிழகத்துக்குத் தண்ணீர் அளிக்கப்படும்.கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரதமர் தலையிட்டு புதிய அணை கட்டுவதற்காக தமிழக அரசிடம் பேசி, சாதகமான முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசு திறந்த மனப்பான்மையுடன் கேரள அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அணைப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றலாம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1979-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் கேரள முதல்வராக இருந்த கருணாகரனும் புதிய அணை கட்டுவதற்கான இடத்துக்கு ஒப்புதல் தெரிவித்ததாக கேரள சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கேரள கோரிக்கையில் மாற்றம்பிரதமரிடம் கேரள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அளித்த மனுவில் அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இது பத்திரிகையாளர்களிடம் அளிக்கப்பட்ட செய்திக் குறிப்பில் இடம் பெற்றிருந்தது. ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்தவுடன் புதிய கோரிக்கை மனுவின் திருத்தப்பட்ட இணைப்பு என்று பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தலாம் என்ற கோரிக்கை இடம் பெறவில்லை.இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் கேட்ட போது "அணை பாதுகாப்புச் சட்டத்தின் நகலை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. அதை கேரள அரசு முழுமையாகப் படிக்கவில்லை. ஆகையால் இந்தக் கோரிக்கையை நீக்கி பிரதமரிடம் மனு அளித்தோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக