திங்கள், டிசம்பர் 12, 2011

பாலஸ்தீனம் என்றொரு நாடு கிடையாது - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரின் திமிர் பேச்சு

பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவர்கள் என்று நியுட் கிங்ரிச் தெரிவித்துள்ள கருத்து பலத்த கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இவர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் என்றொரு தனி நாடே இருந்ததில்லை என்றும் உதுமானியப் பேரரசின் ஒரு பகுதியாகத்தான் 20 ஆம் நூற்றாண்டின்ஆரம்பம் வரை அது இருந்து வந்துள்ளது என கிங்ரிச் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் உள்ள அரபுக்கள் பல இடங்களுக்கு செல்ல வசதியிருந்தும் அரசியல் காரணங்களினால் 1940 முதல் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது
என்றும் அவர் கூறியுள்ளார். வெள்ளியன்று ஒரு யூத தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கிங்ரிச் இவ்வாறு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்திருப்பதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

யூதர்களின் ஆதரவைப் பெறுபவர்கள்தான் அமெரிக்க அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் கிங்ரிச் இவ்வாறு இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார். பாலஸ்தீன அரசும் ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலை அழிப்பதற்கு தீவிர ஆசைக் கொண்டிருப்பதாகவும் கிங்ரிச் தெரிவித்துள்ளார். 

இனவாதக் கருத்துக்களை தெரிவித்துள்ள கிங்ரிச் அதிபர் தேர்தலில் நிற்பதற்கு தகுதியற்றவர் என்று ஹனன் அஷ்ரவி என்ற பாலஸ்தீனத்தைச் சார்ந்த அரசு உயர் அதிகாரி கண்டனம் தெரிவித்துள்ளார். 1969 ஆம் ஆண்டு இஸ்ரேலை ஆண்ட கோல்ட்மேயரைப் போன்று கிங்ரிச் கருத்து தெரிவித்துள்ளதாக அஷ்ரவி தெரிவித்துள்ளார். கிங்ரிச்சின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஸயீப் எரிகாத் , இதைவிட குறைவாக யாரும் சிந்திக்க முடியாது என்று கூறியுள்ளார். இவர் பாலஸ்தீன ஜனாதிபதி அரசியல் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை வழிபாட்டுஉரிமைகள் வாழ்வாதாரங்களை மறுத்து வந்தவர்கள் தற்போதுதங்களின் இருப்பையே மறுதலிப்பதையே இது காட்டுகிறது என எரிகாத் குறிப்பிட்டுள்ளார்.

1948ல் நடைபெற்ற போருக்கு பிறகு ஏறத்தாழ 11 மில்லியன் பாலஸ்தீன மக்கள் அகதிகளாக உலகெங்கும் வாழ்ந்து வருகின்றனர். 4 மில்லியன் பாலஸ்தீனர்கள் பாலஸ்தீனத்தில் உள்ள காஸா மற்றும் மேற்குக்கரை என்ற இரு இடங்களில் வசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக