வியாழன், டிசம்பர் 15, 2011

குண்டுவெடிப்பு பொய் வழக்குகளில் விடுதலைச் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு மக்கா மஸ்ஜித் நிதியில் இழப்பீடு – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்


ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் நிரபராதிகள் என நிரூபணமானதை தொடர்ந்து விடுதலைச் செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆந்திர மாநில அரசு 70 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த இழப்பீடு தொகை மக்கா மஸ்ஜித் மற்றும் பப்ளிக் கார்டன் ஷாஹி மஸ்ஜித்
நிதியிலிருந்து அளிப்பதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பின்னர் செய்தி வெளியானது.
ஆந்திர அரசின் இச்செயலுக்கு அம்மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய சிறுபான்மை கமிஷன், விடுவிக்கப்பட்ட அப்பாவிகள் தொடர்பாக அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுத்தொடர்பாக ஆந்திரமாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் டி.எஸ்.ஹபீபில்லாஹ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி அரசு வெளியிட்ட உத்தரவில் குண்டுவெடிப்புகளில் போலியாக சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்ட
அப்பாவிகளுக்கு அவர்களது ‘நம்பிக்கையை பலப்படுத்தும் நடவடிக்கையாக’ இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தது.ஆனால் இது முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் நகைச்சுவை நடவடிக்கை என்பது நிரூபணமாகியுள்ளது. அரசு உடனடியாக மஸ்ஜிது நிதியிலிருந்து இழப்பீடு வழங்கும் உத்தரவை வாபஸ்பெற்று தேசிய சிறுபான்மை கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என ஹபீபுல்லாஹ் கூறியுள்ளார்.
முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க மற்றும் அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள், ஹைதராபாத்தின் சமூக ஆர்வலர்கள் ‘ஹைதராபாத் நகரத்திலும், ஆந்திர மாநிலம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முன்வரவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை பலப்படுத்த முடியும். மேலும் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்களை தடுத்த நிறுத்தலாம் என பாப்புலர் ஃப்ரண்ட் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக