செவ்வாய், டிசம்பர் 06, 2011

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்புகளில் 34 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் இன்று (06.12.2011) நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் 34 பேர் உயிரிழந்தனர். காபுல் மற்றும் மஷாரேஷரீப் ஆகிய இடங்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
ஷியா முஸ்லிம்கள் முஹர்ரம் 10 ஆம் தினத்தை ஆஷூரா எனும் தினமாக அனுசரித்து வருகின்றனர். முஹம்மது நபியின் பேரர் ஹுசைன் இந்த தினத்தில் கொல்லப்பட்டதால் இந்த தினத்தை ஷியா முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இன்று அவர்கள் பெருமளவில் கூடுகின்ற
இரண்டு புனிதத் தலங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளது. காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர். காபூலில் உள்ள அபுல் பஷில் என்ற புனிதத்தலத்தின் வாசலில் நின்று தற்கொலை குண்டுதாரி இந்த தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஷாரே ஷரீப் நகரத்தில் நடைபெற்ற தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இங்கு ஒரு சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினமாக இருந்ததால் பெருமளவில் மக்கள் இந்த புனிதத் தலங்களில் குழுமியிருந்தனர்.  பலர் கடுமையான காயத்திற்குள்ளாகினர். தலிபான் ஆட்சியின் போது ஆஷுரா தினத்தை பொது இடங்களில் அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக