மதுரை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக செயல்பட்ட பொட்டு சுரேஷ் மதுரையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகிரியின் தீவிர விசுவாசியும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர் பொட்டு சுரேஷ். இவர் இன்று இரவு மதுரையில் அழகிரி இருக்கும் வீட்டு பக்கத்தில் சத்யசாய் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் வெட்டிக் கொன்றது யார் என்பது தொடர்பாக மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் என்றாலும் பொட்டு சுரேஷ், அழகிரியின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர். தொடக்க காலங்களில் சாலையோரங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து பின்னர் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனுடன் நெருக்கமாக இருந்தார். கடந்த சில ஆண்டுகாலமாக மு.க. அழகிரியின் அதிதீவிர விசுவாசியாக இருந்து வந்தார்.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நில அபகரிப்பு வழக்கில் பொட்டு சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. ஆனால் தம் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து ரத்து செய்ய வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தாம் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன் என்று கூட கூறினார்.
ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக மீண்டும் அழகிரியுடன் ஐக்கியமாகி இருந்தார் பொட்டு சுரேஷ். கொலையாளிகள் யார்? திமுக ஆட்சிக் காலத்தில் பொட்டு சுரேஷ் தென் தமிழகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பொட்டு சுரேஷை கொல்ல கூலிப்படை ஏவியது யார் என்பது மர்மமாக இருந்து வருகிறது. இது தொழில் போட்டியால் நடந்ததா? அல்லது பொட்டு சுரேஷை பிடிக்காத திமுகவினரின் சதியா? என்பது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக