வெள்ளி, பிப்ரவரி 01, 2013

புதுவை மாஜி அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு 4 ஆண்டு சிறை !

திண்டிவனம்: எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுதிய புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்திற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திண்டினம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை யூனியன் பிரதேச கல்வி அமைச்சராக இருந்த கல்யாண சுந்தரம், 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த 10ம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்தார். ஆனால், தேர்வு நாளன்று ஆள்மாறாட்டம் செய்து வேறு நபரை வைத்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை கடந்த செப்டம்பர் 5ம் தேதி தொடங்கியது. 

விழுப்புரம் மாவட்ட அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, அப்போதைய திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம், தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் உட்பட மொத்தம் 56 சாட்சிகளிடம் விசாரனை நடந்தது. இந்த வழக்கில் 29ம் தேதி விசாரணை முடிவடைந்தது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுதிய முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சரிதா தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ஆதவன், மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிபதி சரிதா உத்தரவிட்டார்.
2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக