ரஷ்யாவின் யூரல் மலைக்கு மேலாகப் பறந்து வந்து உறைந்த செபார்க்குல் ஏரிக்குள் மோதிய விண்கல்லின் பெரிய பாகம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பு குறித்து தலைமை ஆய்வாளரான விக்டொர் குரோக்கோவ்ஸ்கி, விண்கல் விழுந்ததால் செபார்க்குல் ஏரியில் ஏற்பட்ட 25 அடி அகலமான குழியில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 100ற்கும் அதிகமான துண்டுகளில் இதுவே மிகப்பெரியது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த 1Kg நிறையுடைய பாகம் உட்பட பல விண்கல்லின் சிதறிய பாகங்கள் யூரல் மத்திய பல்கலைக்கழகத்தினால் சுமார் 30 பனிச்சறுக்கு வீரர்களின் உதவியுடன் 50 Km தூரம் வரை பயணித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெப்ரவரி 15ம் திகதி ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் நகர்ப் பகுதியில் தரையுடன் மோதும் முன் வெடித்துச் சிதறிய எரிகல்லில் இருந்து புறப்பட்ட அதிர்வலைகளால்(Shock waves) 1200 பொது மக்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து சுமார் 24 000 ஊழியர்களும் 4300 சிறு உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டு விண்கல் தாக்கத்தால் நிகழ்ந்த சேதத்தைத் துப்பரவாக்கினர்.
இதேவேளை நாசாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ரஷ்யாவைத் தாக்கிய விண்கல் 50 அடி விட்டமுடையது எனவும் ஒலியை விடப் பன்மடங்கு வேகத்துடன் இது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல விஞ்ஞானிகள் இந்த விண்கல் அந்தரத்திலேயே வெடித்துச் சிதறாமல் நேரடியாகப் பூமியின் தரையில் மோதியிருந்தால் அதன் விளைவு தற்போது ஏற்பட்டதை விடப் பன்மடங்கு இருந்திருக்கும் எனவும் பல உயிர்கள் பலியாகியிருக்கலாம் எனவும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக