சனி, பிப்ரவரி 16, 2013

ஹெலிகாப்டர் ஊழல் : ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது இந்தியா !

புதுடெல்லி: லஞ்ச ஊழல் அம்பலமானதன் எதிரொலியாக இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

லஞ்சம் பெற்றவர்கள் யார்? 

இது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து 7 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

"ஹெலிகாப்டர் பேரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கொடுப்பதற்கும், இடைத்தரகர்களின் தொடர்புக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் எந்தவொரு நிறுவனத்துக்கோ, தனி நபருக்கோ பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதா? அப்படி பணப்பரிமாற்றம் செய்திருந்தால் அது ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கையை, ஒப்பந்த விதிமுறைகளை, நிபந்தனைகளை மீறிய செயலாக அமையும். எனவே தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அதுபற்றிய விவரங்களை தெரிவித்து உங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சிதன்ஷு கர்,"2010ஆம் ஆண்டில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக செய்து கொண்ட ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 

முறைகேடு குற்றச்சாட்டு குறித்து அவர்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.  ஹெலிகாப்டர்களை  வாங்குவது தொடர்பாக அந்நிறுவனமும்,பாதுகாப்புத் துறை அமைச்சகமும் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு உள்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்" என்று  தெரிவித்தார்.

மொத்தமுள்ள 12 ஹெலிகாப்டர்களில் மூன்றை இந்தியா ஏற்கெனவே வாங்கிவிட்டது.மொத்தப் பணத்தில் 30 சதவீதம் அந்நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்கும் இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு அந்நிறுவனம் ரூ.362 கோடி லஞ்சமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த முறைகேடு தொடர்பாக ஃபின்மெக்கனிகா நிறுவனத்தின் தலைவர் கியூசெப் ஒர்சி இத்தாலி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்மெக்கனிகாவின் துணை நிறுவனம்தான் அகஸ்டா வெஸ்ட்லேண்ட். 

இதையடுத்து அந்நிறுவனத்திடம் இருந்து எஞ்சிய 9 ஹெலிகாப்டர்களைப் பெறுவதையும்,அதற்கான பணத்தை அளிப்பதையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.இப்போது அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக