சனி, பிப்ரவரி 02, 2013

கமல் வர வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரியதால் முத்தரப்பு பேச்சு நாளைக்கு ஒத்திவைப்பு !

சென்னை: விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான முதல்கட்ட சந்திப்பு முடிந்துவிட்டது. மாலை 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கமல்ஹாசன் இல்லாமல் காட்சிகளை வெட்டுவது சாத்தியமாகாது என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறி விட்டன. இதையடுத்து பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கமல்ஹாஸனின் விஸ்வரூபத்தில் பல காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டதால், படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து தினங்களாக இந்தப் படம் தொடர்பான சர்ச்சை உச்சபட்ச பிரச்சினையாக மீடியாவில் வலம் வந்து கொண்டுள்ளது. 

இந்த நிலையில் படத்தில் உள்ள ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்க கமலுக்கு சம்மதமென்றால் படத்தை வெளியிட அரசு உதவும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளுடன் சமாதானம் பேச ஆரம்பித்துள்ளனர். கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாஸனும், இயக்குநர் அமீரும் இஸ்லாமிய அமைப்புகளுடன் முதல்கட்ட பேச்சுகள் நடத்திவிட்டனர். மாலையில் நட்சத்திர ஹோட்டலில் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் 2வது கட்டப் பேச்சு நடப்பதாக இருந்தது. இதில் 24 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், கமலின் அண்ணன் சந்திரஹாஸன், அமீர் மற்றும் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலர், அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.

 முதல் கட்டப் பேச்சுவார்த்தையின்போது, விஸ்வரூபத்திலிருந்து 30 நிமிடக் காடசிகளை நீக்க இஸ்லாமிய அமைப்புகள் கோரியிருந்தனர். இதுகுறித்து சந்திரஹாசன், கமல்ஹாசனிடம் தெரிவித்ததாக தெரிகிறது. அதற்கு கமல் ஹாசன் நான் வந்து பார்த்த பிறகு காட்சிகளை வெட்டுவது குறித்து முடிவு செய்யலாம் என்றார். தற்போது கமல்ஹாசன் மும்பையில் உள்ளார். 

நாளைதான் அவர் சென்னை திரும்புகிறார். கமல்ஹாசன் இல்லாமல் பேச்சுவார்த்தையை தொடருவது சரியாக இருக்காது என்று இஸ்லாமிய அமைப்புகளும் கருத்து தெரிவித்தன. இதையடுத்து பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உள்துறைச் செயலர் சந்திப்பு இதனிடையே கமலின் அண்ணன் முன்னதாக சந்திரஹாஸனை இன்று தமிழக உள்துறைச் செயலர் சந்தித்துப் பேசினார்.

 ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர் கேட்டதற்கு சம்மதம் தெரிவித்தார் சந்திரஹாஸன்.
2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக