வியாழன், பிப்ரவரி 14, 2013

ஹெலிகாப்டர் பேர ஊழல் : குற்றவாளிகள் தப்ப முடியாது - ஏ.கே. அந்தோனி

இத்தாலி நாட்டு நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்க லஞ்சம் பெற்றதான வழக்கில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிவிட முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் வழங்கும் ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற இத்தாலியின் ஃபின்மெக்கனிகா நிறுவனம் ரூ.360 கோடியை இந்தியாவில் உள்ளவர்களுக்கு லஞ்சமாக வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் கியூசெப் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த லஞ்சத்தைப் பெற்றவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் தொடர்புடையவர் என பேசப்படும் விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என மறுத்துள்ளார்.
இந்நிலையில் தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. அந்தோனி கூறியது: இந்த விஷயத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் குற்றவாளிகள் தப்பிவிட முடியாது.
இது தொடர்பாக சிபிஐ அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை மேற்கொள்வோம். இத்தாலி நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தம் கூட ரத்து செய்யப்படலாம் என்றார்.
மொத்தம் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதுவரை 3 ஹெலிகாப்டர்கள் பெறப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா இதுவரை செலுத்தியுள்ள பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று அந்தோனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, இது தொடர்பாக அதிரடியாக எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் இதுபோன்ற கொள்முதல்களைச் செய்யும்போது, உரிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். அதன்படி நமது நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதில் தவறு நடந்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியும். நாம் நமது பணத்தை முழுமையாகத் திரும்பப் பெறவும் முடியும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையைக் கொடுத்துதான் தீர வேண்டும்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார் அந்தோனி.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக