பெங்களூர்:இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த தலித்துகள், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இணைந்து அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தென் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தேசியத் தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி ஆற்றிய உரையில்
கூறியது:
நாட்டில் தலித்துகள், பழங்குடியினர், பிற்பட்டோர், சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், சமூகத்தில் அவர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழும் வகையில், இந்திய அரசியல் சாசனத்தை அம்பேத்கர் இயற்றினார். அதில் இடம் பெற்றுள்ள பலன்கள் முழுமையாக அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதற்கு காங்கிரஸ் கட்சியும், அதில் இடம் பெற்றுள்ள மேலாதிக்க அரசியல்வாதிகளும்தான் காரணம். இவர்கள் அரசியல்சாசனத்தின் பலனை மக்களுக்கு கிடைக்கச் செய்யாமலும், தலித்துகள், பிற்பட்ட மக்களிடையே பிரிவுகள், கலவரத்தை ஏற்படுத்தி, அந்த இனங்களையே அழிக்கும் செயலில் ஈடுபட்டு
வருகின்றனர்.
வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், அரசியல் சாசனத்தின் அனைத்துப் பலன்களையும் பெற, அவர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். அனைவரும் இணைந்து வாக்குச் சக்தியாக உருவாக வேண்டும் என்று 1948-ஆம் ஆண்டே அம்பேத்கர் வலியுறுத்தினார்.
மாற்றம் வேண்டுமென்றால் தலித்துகள், பழங்குடியினர், பிற்பட்டோர், சிறுபான்மையினர் இணைந்து அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும். பிற்பட்டோரிலும் வறுமையில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தலித்துகளுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சிறுபான்மையினர் நலனுக்காக அமைக்கப்பட்ட சச்சார் குழு அளித்த பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்தும், அதை அரசு கண்டுகொள்ளவில்லை. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு உள்ளிட்ட மக்கள் விரோதத் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. இதனால், நாட்டில் விலைவாசி உயர்ந்து, வேலையின்மை அதிகரிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இணைந்து அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும். என்றார் அவர்.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக