ஹைதராபாத் தில்சுக் நகரில் பிப்ரவர் 21 ஆம் தேதியன்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்புகளில் சுமார் 17 பேர் பலியாகியுள்ளனர். 120 க்கும் மேற்பட்டோர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதாரண மக்களைக் கொடூரமாக காவுகொள்ளும் இத்தகைய அக்கிரமப் பயங்கரவாதச் செயல்களின் பின்னணியில் செயல்படுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மனித குலத்தின் அமைதியான வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அத்தகைய பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டுவருவதோடு, எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி அவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டுமென்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை!
இரண்டு நாட்களுக்கு முன் 21 ஆம் தேதி - ஹைதராபத் தில்சுக் நகரில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுநாளே வழக்கம்போல் போலீஸும் ஊடகங்களும் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரை உரத்துச் சொல்லத் துவங்கி விட்டன.
2008 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் வெடிகுண்டு வெடித்ததும் முதன்முதலாக இப்பெயரைப் போலீஸும் ஊடகங்களும் கூறின. இந்தப் பயங்கரவாத(?) அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக்குற்றம் சாட்டப்பட்டுப் பதினான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொடுமைப்படுத்தப் பட்டனர். அவர்களின் ஆரோக்கியத்தையும் மன நலத்தையும் பாதிக்கச் செய்யும் அளவிற்கு "விசாரணைகள்" மேற்கொள்ளப் பட்டு ஊடகங்களின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் முற்றிலும் கேள்விக்குறியாகி விட்ட நிலையில் அவர்கள் அனைவருமே நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டனர்
இப்போது ஹைதராபாத் தில்சுக் நகர் நிகழ்விலும் எந்த அமைப்பும் இந்தக் குண்டு வெடிப்புக்கு உரிமை கோரா நிலையில், எவ்வித ஆதாரமோ ஆலோசனையோ இன்றி ஸ்டீரியோ டைப்பில் "இந்தியன் முஜாஹிதீன்" எனும் பெயரைச் சொல்லத் துவங்கி விட்டனர்.
கூட்டு மனசாட்சியைத் திருப்திப் படுத்த அப்ஸல் குருவைத் தூக்கிலேற்றியது போன்றே இதிலும் கூட்டுமனசாட்சியைத் திருப்திப்படுத்த இந்தியன் முஜாஹிதீன் பெயரைச் சொல்கின்றனபோலீஸும் ஊடகங்களும் என்பது வெகுஜனங்களுக்குக் கூட தெளிவாகி விட்ட ஒன்று . அறிவியல் ரீதியில் அமைந்த, முறையான புலனாய்வுக்குப் பின் சான்றுகளின் ஆவணங்களின் அடிப்படையில் வழக்கை நடத்திச்செல்ல போலீசுக்குப் போதிய நேரமில்லை. எனவே அவசர கோலத்தில் ஏதோ ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரைச் சொல்லி இந்தியாவின் கூட்டு மனசாட்சியைத்(!) திருப்திப் படுத்துகின்றனர்.
அதன் பிறகு வேறு புலனாய்வு ஏஜென்சிகள் வந்து, சிறைப்பட்டவர்கள் குற்றமற்றமறவர்கள் எனக்கண்டுபிடித்துச் சொல்வது வரை ஊடகங்கள் நாளொரு கதையும் பொழுதொரு புனைவுமாகப் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டே இருக்கப் போகின்றன.
இறுதியில் எப்போதும்போல் மற்றொரு பயங்கரவாதத்தாக்குதல் நடைபெறும்வரை, மும்பை பயங்கரவாதத்தாக்குதல் மற்றும் நாடாளுமன்றத் தாக்குதல்களைப் போன்று பயங்கரவாதத்தின் பின்னணியில் செயல்பட்ட சக்தியினைக் குறித்த நினைவேயில்லாமல் வேறு காரியங்களில் மூழ்கிவிடப்போகின்றனர்!
உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒன்று இருக்கிறதா?
இருப்பின் அதன் தலைவர்கள் யாவர்?
அவர்களின் தலைமையகம் எங்குள்ளது?
அது என்று முதல் செயல்பட்டு வருகிறது?
அது வெறும் ஈமெயிலில் மட்டும் வெளிப்படும் மர்மம் என்ன?
அல்லது கடிதம் வருகிறது?இதை யார் அனுப்புகிறார்கள் எங்கிருந்து அனுப்புகிறார்கள் ?
ஆந்திரா மாநில பிஜேபி தலைவருக்கு கடிதம் அனுப்பியது யார் ?
பிஜேபி ஏன் இதில் குதியோ குதி குதிக்கிறது?
(குற்றம் உள்ள நெஞ்சு குருகுருக்குமோ)இந்தப் பெயரை முதலில் சொன்னவர் யார்?
இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரைத் தவிர வேறு எந்த விபரத்தையும் இந்தியப் புலனாய்வு ஏஜென்ஸிகள் கண்டுபிடிக்கவில்லை?
(உண்மையில் இவர்கள் உளவுத்துறையா அல்லது காவி துறையா?
குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் இந்தியன் முஜாஹிதீன்க்கு தொடர்ப்பு எனக்கூறுவது ஏன் ?
என்பதில் சந்தேகம் வழுக்கிறது) இன்னும் இவை போன்ற விடை தெரியா வினாக்கள் ஏராளம் உள்ளன.
ஏனெனில் இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதச்செயல்களை ஊக்குவிக்கும் லஷ்கர் அமைப்போ, ஜெய்ஷே முஹமது அமைப்போ தங்களது தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரை வெளிப்படையாக அடையாளம் காட்டுவதோடு அவை பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் நடத்துவதையும் வெளிப்படையாகக் காட்டுகின்றன. சங் பரிவாரங்களும் பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் நடத்துவதாக உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறினார். அந்த வகையில் இந்தியன் முஜாஹிதீன் நடத்தும் முகாம்களைக் கண்டுபிடித்துள்ளார்களா; ஒரு மெயில் அனுப்பியதும் SMS அனுப்பியதும் தான் இந்தியன் முஜாஹித்தீன் இருப்பதற்கான ஆதாரம் என்ற நகைப்புக்குரிய நிலையிலா இந்திய புலனாய்வுத்துறை செயல்படுகிறது? இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரைத் தவிர வேறு எந்த விபரத்தையும் இந்தியப் புலனாய்வு ஏஜென்ஸிகள் கண்டுபிடிக்கவில்லை என்றால் இவர்கள் வேலை செய்வது வீணுக்குத்தானா?
அல்லது இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்சு கூறுவதுபோல், இந்தியன் முஜாஹிதீன் என்பது பணத்துக்காக செய்திகளை உருவாக்கி வெளியிடும் ஊடகங்களின் தயாரிப்பா? அதுதான் உண்மையெனில், பயங்கரவாதச் சம்பவங்களின் பின்னணியில் அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட சதியிருப்பதாக அல்லாவா புலனாகிறது! அதனால்தான், பயங்கரவாதிகள் என அரசே வெளிப்படையாக அறிவிக்கும் சங் பரிவாரங்களின் மீது நடவடிக்கை ஏதும் பாயாமல் இருக்கிறதா?
இந்தியன் முஜாஹிதீன் மெயிலனுப்பியது,எஸ்.எம்,.எஸ் அனுப்பியது ,கடிதம் அனுப்பியது எனக் கூறும் விசாரணை அமைப்பினர் எந்த அலைபேசியில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது எந்த ஐ.பி அட்ரஸில் இருந்து மெயில் வந்தது என்பதைக் கண்டுபிடித்து தீவிரவாதிகளைக் கைது செய்யாதது ஏன்?
இந்தியன் முஜாஹிதீனே செய்து இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வசதியாக விசாரணையின் போக்கைத் திசை திருப்பும் வகையில் கருத்துக்களை கூறி வரும் பாஜக தலைவர்களின் வாயை அடைக்க விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன் முந்திக்கொண்டு, இது கசாப் மற்றும் அப்ஸல் குரு ஆகியோரின் தூக்குக்குப் பழிவாங்கும் செயல் என்று பீ ஜே பி தலைவர்களுள் ஒருவரான வெங்கைய்யா நாயுடு அறிக்கை விட்டு, புலனாய்வு இந்த வழியில்தான் செல்ல வேண்டும் என ரூட்டுப் போட்டுக் கொடுத்தது ஏன்?
முன்னர் சூரத்தில் ப்ளேக் நோய் வந்தபோது பாகிஸ்தானிலிருந்து வந்த எலிதான் சூரத்தின் ப்ளேக் நோய்க்குக் காரணம் என அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்திய அத்வானி இந்தக் குண்டு வெடிப்பு பாகிஸ்தான் சதி எனக் கூறுகிறார்.
மக்கா மஸூதி குண்டு வெடிப்பு மற்றும் ஸம்ஜெளதா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்புகளில் முஸ்லிம்களைக் கைது செய்த பின் இந்துத்துவ இயக்கங்கள்தாம் அக்குண்டு வெடிப்புகளை நடத்தின என்பது அம்பலப்பட்டது.
சுதந்தரமான எவ்வித முன்முடிவுகளும் இல்லாத விசாரணை மேற்கொள்ளப்பட்டாலே இந்தக் கொடும் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடிக்க முடியும். புலனாய்வைத் திசை திருப்பி உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கவே அவசரமாக வெளியிடப்படும் இத்தகைய அறிக்கைகள் உதவும் என்பதை ஆட்சியில் இருந்த இவர்கள் உணர்வார்களா?
இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடும் கடினமான வேலையில் விழிப்போடும் கவனத்தோடும் ஈடுபடும் - சுதந்திரமான செயல்பாடுகளிலும் சட்டத்தின் மாட்சியிலும் நம்பிக்கை கொண்ட கார்கரே போன்ற-- நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இவ்வழக்கில் புலனாய்வு மேற்கொண்டு உண்மைக்குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி விரைந்து வழக்கை விசாரணை செய்து உச்சபட்சத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே சுயமாகச் சிந்திக்கும் மக்களின் அவா!
இது நிறைவேறுமா? அல்லது அப்பாவிகள் சிலர் கைது செய்யப் பட்டு வழக்கு முடிக்கப் பெறுமா? என்பது தான் நம் முன் தொங்கி நிற்கும் முக்கிய கேள்வி.
குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!
ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.
ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள மலக்பேட், முஸாரம்பாக், பந்தலகுடா ஆகிய பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிவுறுத்திய பிறகும் அதனை புறக்கணித்துவிட்டு முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது போலீஸ். மிகவும் எச்சரிக்கையுடனே விசாரணை நடந்துவருவதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் குறிவைத்து விசாரணை நடக்கவில்லை என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறியிருந்தபோதிலும் அதற்கு மாற்றமாகவே போலீசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சந்திரயான் குட்டாவுக்கு அருகில் உள்ள பந்த்லகுடாவில் போலீஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முஹம்மது ரயீசுத்தீன் என்ற 30 வயது இளைஞரை கைது செய்தது. இவரை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை தொடர்ந்து போலீஸ் 6 மாதங்களுக்கும் அதிகமாக கஸ்டடியில் வைத்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னால் அரசு இவருக்கு நிரபாரதி என்பதை நிரூபிக்கும் சான்றிதழை வழங்கி விடுவித்தது. 4 வருடங்களுக்கு முன்னால் திருமணம் முடித்த ரயீஸின் வாழ்க்கை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சீர்குலைந்தது.
விடுவிக்கப்பட்ட பிறகு தனது சொந்த வீட்டை விற்று மனைவி, 3 பிஞ்சுக்குழந்தைகள் மற்றும் தனது வயோதிக தாயாருடன் மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் ஹைதராபாத் குண்டுவெடிப்பின் பெயரால் இவரை மீண்டும் போலீஸ் வேட்டையாடியுள்ளது. போலீஸ் பிடித்துச் சென்ற பிறகு ரயீஸ் எங்கிருக்கிறார் என்று தகவல் எதுவும் இல்லை. காசிகுடா துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அவரது குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
பல மாதங்கள் போலீஸ் கொடுமைகளுக்கு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிய தனது மகனை போலீஸ் வாழ அனுமதிக்கவில்லை என்று ரயீஸின் தாயார் குல்சும் பீவி கூறுகிறார்.
ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு: இருட்டில் துலாவும் போலீஸ்!
ஹைதராபாத்தில் வியாழக்கிழமை நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸ் இருட்டில் துலாவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம் இளைஞர்களை அநியாயமாக வேட்டையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. போலீஸ் இருளில் தடுமாறுவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகிறார்.
ஆறு முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. 2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தாம் மீண்டும் இரட்டைக் குண்டுவெடிப்பின் பெயரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்களை நீதிமன்றங்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலைச் செய்திருந்தன.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சங்க்பரிவாருடன் தொடர்புடைய தீவிர ஹிந்துத்துவா அமைப்பு நடத்தியதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்தது. குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமாரின் பங்கினையும் என்.ஐ.ஏ வெளிப்படுத்தியுள்ளது.
முஹம்மது ரயீசுத்தீன், முஹம்மது ஷக்கீல், அப்துல் ரஹீம், அஸ்மத், அர்ஷத், அப்துல் கரீம் ஆகியோரை நேற்று போலீஸ் விசாரிக்க கஸ்டடியில் எடுத்துள்ளது. இவர்களில் அர்ஷத் மற்றும் அப்துல் கரீமை விசாரணைக்குப் பிறகு போலீஸ் விடுவித்தது. டாக்டர் இப்ராஹீம் ஜூனைதிடம் போலீஸ் ஸ்டேசனில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை ஒரு தலைபட்சமாக நடப்பதாக குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. போலீஸ் கஸ்டடியில் எடுத்தவர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறுகிறார். குண்டுவெடிப்பை
நிகழ்த்தியவர்களைக் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்பதைத்தான் கமிஷனரின் கூற்று சுட்டிக்காட்டுகிறது.
முஸ்லிம் இளைஞர்களை விசாரணை நடத்துவதற்காக அழைத்திருப்பார்கள்.ஆனால் யாரையும் கைது செய்யவில்லை
என்று அனுராக் சர்மா கூறுகிறார். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டவர்களை ஏன் மீண்டும் கஸ்டடியில் எடுத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கமிஷனர், “கருத்துக் கூறுவதற்கு முன்பு உண்மைகளை ஆராயவேண்டும்” என்று கூறினார்.
2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை ஹைதராபாத் போலீஸ் கைது செய்தது. இவர்கள் சித்திரவதைச் செய்யப்பட்டனர். குற்றத்தை பொய்யாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர். பின்னர் 26 பேரை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து மீதமுள்ளவரை போலீஸ் விடுவித்தது.
பின்னர் இவ்வழக்கில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு வெட்டவெளிச்சமானபிறகு நீதிமன்றங்கள் முஸ்லிம் இளைஞர்களை குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது. ஆனால், சிறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவி
முஸ்லிம் இளைஞர்களை சிறையில் கொடுமைகளை அனுபவித்தார்கள். தேசிய சிறுபான்மை கமிஷனின் சிபாரிசின் பெயரால் மாநில அரசு பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டார்கள் என்பதை ஆந்திர மாநில முதல்வரும் ஒப்புக்கொண்டார்.
போலீஸின் நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும், தங்களை போலீஸ் சந்தேக கண்ணோடு பார்ப்பதாகவும் முன்பு மக்கா மஸ்ஜித் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிரபராதியான டாக்டர் இப்ராஹீம் ஜுனைத் கூறுகிறார். அப்பாவிகளான முஸ்லிம் இளைஞர்களை கஸ்டடியில் எடுப்பதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்புகிறார் ஆந்திரபிரதேச சிவில் உரிமை கண்காணிப்பு குழுவின் களப்பணியாளர் லத்தீஃப் முஹம்மது.
ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்களை குறித்து முடிவுக்கு வருவதற்கு முன்பாக முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என்று கத்தோலிக் செக்குலர் ஃபாரம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து ஃபாரத்தின் பொதுச் செயலாளர் ஜோஸஃப் டயஸ், மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவுக்கு மனு அளித்துள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்து சில மணிநேரங்களுக்குள்ளேயே குண்டுவெடிப்பிற்கு காரணம் பாகிஸ்தான் என்றும், இந்தியன் முஜாஹிதீன் என்றும் செய்திகள் பரப்புரைச் செய்யப்பட்டதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக