வியாழன், பிப்ரவரி 14, 2013

வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு !

கண்ணிவெடித் தாக்குதல் மூலமாக 22 காவல்துறையினரைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதியை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் கர்நாடகா சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி ககன்தீப் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த தேதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றும், சிறை வளாகத்திலேயே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மைசூர் தடா நீதிமன்றத்தின் நீதிபதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று டி.ஜி.பி ககன்தீப் கூறியுள்ளார். இந்நிலையில், குடியரசு தலைவர் முடிவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக,கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு அருகே கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி போலீசார் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த கண்ணி வெடி தாக்குதலில் போலீசார், வனத்துறையினர் உள்பட மொத்தம் 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். இந்த வழக்கில் 127 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் தடா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் குற்றமற்றவர்கள் என 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான வீரப்பன் கூட்டாளிகள் ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் இவர்கள் நால்வருக்கும் விதித்த ஆயுள் தண்டனை செல்லும் என கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு வந்த போது, வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண் டனை விதித்தது குறைவானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த நான்கு பேருக்கும் கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து நான்கு பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், இந்த நான்கு பேரின் கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்தார். இதையடுத்து இந்த நான்கு பேரின் தூக்கு  தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் தற்போது கர்நாடக மாநிலம் பெல் காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி ககன்தீப் கூறுகையில், ‘கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்னும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும். எந்த தேதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை மாஜிஸ்திரேட் முடிவு செய்வார்,‘ என்று தெரிவித்தார். இவர்கள் நான்கு பேரும் பெல்காம் சிறையிலேயே தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிகிறது. அப்படி தூக்கிலிடப்பட்டால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்காம் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.            3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக