சென்னை: முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதா பாதைக்கு வர வேண்டும் என்று திட்டக்குடி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அவர்களை ராதாபுரம் தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார்.
அப்போது அவருக்கு சரமாரியாக அடி விழுந்தது. சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், மதுரை மேற்கு சுந்தரராஜன், பேராவூரணி நடிகர் அருண் பாண்டியன் ஆகிய நான்கு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை அடுத்தடுத்துப் பார்த்து அதிமுக ஆதரவாளர்களாக மாறினர்.
இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சி அடைந்தது. ஒருமுறை சட்டசபைக்குள் வைத்து சுந்தரராஜனை தேமுதிக எம்.எல்.ஏக்கள் மிகவும் அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திட்டக்குடி தமிழழகன் பேசினார். அப்போது நான் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எனது தொகுதிப் பிரச்சினைகள், குறைகள் குறித்து முறையிட்டேன். பல கோரிக்கைளை வைத்தேன். அவற்றை முறையாகப் பரிசீலித்தார் முதல்வர், முடிந்தவரை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.
முதல்வரைப் பார்தது விட்டு வந்த பின்னர்தான் எனது தொகுதிகளில் இப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே என்னைப் போலவே மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வரைச் சந்திக்க வேண்டும், தங்களது குறைகளைக் கூற வேண்டு்ம். அவற்றை நிறைவேற்ற முதல்வர் காத்திருக்கிறார் என்றார். அவருக்கு ஆதரவாக ராதாபுரம் மைக்கேல் ராயப்பனும் பேசினார். இதைக் கேட்டதும் டென்ஷன் ஆனார்கள் தேமுதிக எம்.எல்.ஏக்கள். உடனடியாக தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்து தமிழழகனைத் தாக்க ஓடினர்.
இதைப் பார்த்த மைக்கேல் ராயப்பன் தமிழழகனை யாரும் அடித்து விடாமல் தடுக்க முயன்றார். அப்போது தேமுதிக எம்.எல்.ஏக்கள் கையில் சிக்கிக் கொண்டார் மைக்கேல் ராயப்பன். அவரை தேமுதிகவினர் சரமாரியாக அடித்து நொறுக்கி விட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவைக் காவலர்களை அழைத்த சபாநாயகர் தனபால், தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் தவிர மற்றவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
காயமடைந்த மைக்கேல் ராயப்பன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த வன்முறைத் தாக்குதல் நடந்தபோது முதல்வர் ஜெயலலிதாவும் அவையில் இருந்தார். மைக்கேல் ராயப்பனும் திருப்பி அடித்தார்-அனகை சட்டை கிழிந்தது இந்த சண்டைக் காட்சியை அத்தனை உறுப்பினர்களும் பரபரப்புடன் வேடிக்கை பார்த்தனர்.
தன்னைத் தாக்கிய தேமுதிக எம்.எல்.ஏக்களை மைக்கேல் ராயப்பனும் பதிலுக்குத் தாக்கினார். அப்போது அனகை முருகேசன் என்ற தேமுதிக எம்.எல்.ஏவின் சட்டை கிழிந்தது. இருந்தாலும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மைக்கேலால் தனியாக சமாளிக்க முடியவில்லை. இதனால் அவருக்குத்தான் நிறைய அடிகள் விழுந்தன. திமுக எம்எல்ஏக்கள் வரவேயில்லை: நல்லவேளையாக இன்று திமுக எம்எல்ஏக்கள் யாரும் அவைக்கு வரவில்லை.
தங்களுக்கு பேச அனுமதி தருவதில்லை, ஏதாவது பேசினால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போடுகிறார்கள் என்பதால் சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று அவைக்குப் போக மாட்டோம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்றே அறிவித்துவிட்டது நினைவுகூறத்தக்கது.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக