திங்கள், பிப்ரவரி 11, 2013

அப்ஸல் குருவுக்கு திஹாரில் தூக்கு: அதிகரிக்கும் மர்மங்கள் !

புதுடெல்லி:அப்ஸல் குருவின் சொந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கும்,பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு அவருடன் நேர்முகம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கும் பதில் கிடைக்காத கேள்வி ஒன்று உள்ளது. ஆங்கில மருந்து கடைக்கு சொந்தக்காரரான மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்ட அப்ஸல் குருவுக்கும், மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்ஸல் குருவுக்கும் இடையேயுள்ள தூரத்தைக் குறித்தே அக்கேள்வி. சிறையில் அவருடன்
நேர்முக பேட்டியை எடுத்த கேரளாவைச் சார்ந்த ஆங்கில பத்திரிகையாளர் வினோத் கே.ஜோஸ் இதனை விவரிக்கிறார்.
கஷ்மீருக்கு சுதந்திரத்தைக் கோரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் பழைய அனுதாபியில் இருந்து ஜெய்ஷே முஹம்மது போன்ற இயக்கங்களை நோக்கிய அப்ஸலின் பரிணாமத்தைக் குறித்த ரகசிய கதை. அதன் மர்மமான பின்னணி ஒருவேளை தூக்குமேடையில் முடிவடைந்த அப்ஸலின் இவ்வுலக வாழ்க்கையோடு பலியாகிவிட்டதாக இலக்கியவாதியான என்.எஸ்.மாதவனும் கூறுகிறார்.
சிறு வயதில் தந்தையை இழந்தபோதும் சகோதரர்களின் பாதுகாப்பில்  கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை படிப்பதற்காக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். தொன்னூறுகளின் துவக்கத்தில் ஜே.கே.எல்.எஃபின் தீப்பொறி பறக்கும் அரசியல் உரைகளால் கவரப்பட்டு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீருக்கு பயிற்சிக்காக சென்றேன். அது எனக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்து விரைவாகவே சொந்த ஊருக்கு திரும்பி சாதாரண வாழ்க்கையை வாழ துவங்கினேன். ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை.
ராணுவத்தினரால் குறிவைக்கப்பட்ட நான், அடிக்கடி கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன். மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. பெட்ரோலில் குளிப்பாட்டினார்கள். பனிக்கட்டி மீது கிடத்தப்பட்டேன். மிளகாய்ப் பொடியை புகைக்க வைத்தார்கள். பொய் வழக்கை சுமத்தினார்கள்.
எனக்காக வாதாட வழக்கறிஞர் இல்லை. இறுதியில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டேன். போலீஸ் கூறிய கதைகளை ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட்டன. சமூகத்தையும், நீதிபீடத்தையும் கூட இக்கதைகள் ஈர்த்தன. இவ்வாறு நான் மரணத்தண்டனையை பெற்றேன் – வினோத்துடன் நடந்த நேர்முகப்பேட்டியில் அப்ஸல் இவ்வாறு துவங்கினார்.
மக்பூல் பட்டை தூக்கிலிட்டதை தொடர்ந்து கஷ்மீர் கொந்தளித்த சூழலில் தான் அப்ஸல் குரு வளர்ந்தார். கஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான தீர்வை விரும்பி கஷ்மீரிகள் மீண்டும் ஒருமுறை தேர்தலில் வாக்களிக்க முடிவெடுத்த காலம். தேர்தலில் அதிகமான முறைகேடுகள் நடந்தன. பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்ற முஸ்லிம் யுனைட்டட் ஃப்ரண்டின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பாதுகாப்பற்ற சூழலில் ஆயுதங்களை தூக்க தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். எல்லோரையும் போலவே மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஜே.கே.எல்.எஃபில் சேர்ந்தார். பல வாரங்கள் கழிந்து ராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர் மருந்து கடையை துவக்கினார். திருமணம் முடித்தார். புதிய வாழ்க்கையை துவக்கினார்.
ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸுடன்(எஸ்.டி.எஃப்) ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் தானும் குடும்பமும் தொந்தரவுக்கு ஆளாவோம் என்பதை அப்ஸல் நம்பினார். இக்காலக் கட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தேவீந்தர் சிங், சிறிய வேலை ஒன்றைச் செய்ய ஒப்படைத்தார். இதற்கு கட்டுப்பட்டதே தான் பாராளுமன்ற தாக்குதல் வழக்கி சிக்க காரணம் என்று அப்ஸல் குரு கூறினார். ஆனால், அந்த சிறிய வேலையை செய்து கொடுக்காமல் இருக்க அப்ஸலுக்கு முன்னால் வேறு வழியில்லை. முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று வாடகைக்கு ஒரு வீட்டை ஏற்பாடுச் செய்யவேண்டும் என்பதே அவ்வேலை. அப்ஸல் இதற்கு முன்பு முஹம்மதை கண்டதில்லை. (ஐந்து துப்பாக்கி ஏந்திய நபர்களுடன் முஹம்மதை போலீஸ் அடையாளம் கண்டது) டெல்லியில் இருந்த பொழுது தனக்கும், முஹம்மதுக்கும் தேவீந்தர் சிங்கின் போன் கால்கள் தொடர்ந்து வந்ததாக அப்ஸல் கூறுகிறார். முஹம்மது ஏராளமானோரை டெல்லிக்கு அழைத்து வந்ததையும் வினோதிடம் அப்ஸல் குரு தெரிவித்தார்.
சொந்த ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்து நின்ற வேளையில் அப்ஸல் குரு கைதுச் செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேசன்களிலும், இதர இடங்களிலும் கொடூரமான சித்திரவதைகள். அவரது உறவினர் ஷவ்கத்,  மனைவி நவ்ஜோத், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி ஆகியோர் இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக வாக்குமூலம் அளிக்க கோரி சித்திரவதை. ஊடகங்கள் நம்பும் வகையில் வாக்குமூலம் அமையவேண்டும். மறுத்தபொழுது குடும்பத்தினரை கொல்வோம் என்ற மிரட்டல். குடும்பத்தினரை உயிரோடு காண வேண்டுமெனில் போலீசுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்ற மிரட்டல். சிறிது காலம் கழிந்து வழக்கை பலகீனப்படுத்தும் வகையில் கொண்டுவரலாம் என்று ஸ்பெஷல் பிரிவு போலீஸ் அதிகாரி அப்ஸலுக்கு வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதிதான் அப்ஸலை பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தீவிரவாதியாக மாற்றியது.
“பாராளுமன்ற தாக்குதல் யார் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினார்கள் என்பது மக்களுக்கு தெரியாது. எஸ்.டி.எஃப் திட்டமிட்டு, டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நடைமுறைப்படுத்திய வழக்கில் என்னை சிக்கவைத்தார்கள். போலீசாருக்கு விருதுகள் கிடைத்தன. எனக்கு மரணத்தண்டனையும்”- அப்ஸல் குரு நேர்முகத்தில் கூறினார்.
பாராளுமன்ற தாக்குதல் நடக்கும்பொழுது அதற்கு நேரடி சாட்சியாக இருந்தவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் விநோத். பிரபல ஆங்கில பத்திரிகையின் டெல்லி செய்தியாளர் அவர். தொன்னூறுக்கும் மேற்பட்ட எம்.பிக்களை நேரில் சந்தித்து பேசி பாராளுமன்ற தாக்குதலின் மர்மங்களைக் குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்தார். ஆனால், அவரது பத்திரிகை கூட அதனை பிரசுரிக்கவில்லை.
2

1 கருத்து: