வெள்ளி, பிப்ரவரி 15, 2013

ஹெலிகாப்டர் ஊழல் கம்ப்யூட்டர் கம்பெனிகள் மூலம் ரூ.217 கோடி லஞ்சம் கைமாறியது !

புதுடெல்லி : இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் ஆர்டரை எடுக்க, இடைத் தரகர்களுக்கு இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ.217 கோடி லஞ்சம் வழங்கி இருப்பது இத்தாலி அரசின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் போன்ற வி.ஐ.பி.க்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்காக, 12 நவீன ஹெலிகாப்டர்களை ரூ.3 ஆயிரத்து 600 கோடி மதிப் பில் வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்தது. 

இந்த டெண்டரை எடுத்த இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் 3 ஹெலிகாப்டர்களை சப்ளை செய்துள்ளது. 9 ஹெலிகாப்டர்கள் இன்னும் சப்ளை செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்திய ஆர்டரை பிடிக்க அகஸ்ட் வெஸ்ட்லேண்ட் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து இத்தாலி புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி, லஞ்சம் கொடுத்த அதிகாரிகளை கைது செய்துள்ளனர். அது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இந்திய விமானப்படை 18 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக் கூடிய வி.ஐ.பி ஹெலிகாப்டர்களை வாங்க முதலில் திட்டமிட்டிருந்தது. பிரான்ஸ் நாட்டின் யூரோகாப்டர் மட்டுமே 18 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக் கூடியவை. மற்ற நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் 15 ஆயிரம் அடி உயரம் வரை மட்டுமே பறக்கும். இதனால் இந்திய டெண்டரில் மற்ற நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்திய ஆர்டரை பெற இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் தீவிர முயற்சி எடுத்தது. இதற்காக இடைத்தரகர்களை அணுகியது. 7.5 சதவீத கமிஷன் தொகை முதலில் பேசப்பட்டது. இறுதியில் கமிஷன் தொகை 10 சதவீதமாக (ரூ.362 கோடி) உயர்ந்தது. 

கிறிஸ்டியன் மைக்கேல் என்ற முக்கிய இடைத்தரகருக்கு பின்மெக்கானிகா  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்சி, அதன் துணை நிறுவனமான அகஸ்ட் வெஸ்ட் லாண்ட்  தலைமை செயல் அதிகாரி ஸ்பாக்னோலின் ஆகியோர் ரூ.217 கோடி வழங்கினர். கிடோ ராலப் ஹஸ்கே மற்றும் கார்லோ ஜெரோசா என்ற இடைத் தரகர்களுக்கு ரூ.2.8 கோடி வழங்கினர்.

இவர்கள் இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியின் நெருங்கிய உறவினர்கள் ஜுலி, டாக்சா, சந்தீப் தியாகி ஆகிய 3 பேரிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு ரூ.72 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளனர். துனிசியா மற்றும் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் மூலம் லஞ்சம் பணம் கைமாறியுள்ளது. அதன்பின்பு விமானப்படையின் நிபந்தனை தளர்த்தப்பட்டு, அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனம் ஆர்டரை பிடித்துள்ளது. 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.                                                  1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக