கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தொன்றில் ஒன்பது ஆட்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஏழாண்டுகள் சிறையில் வாடிய இந்திய வாகன ஓட்டி ஒருவருக்காக சவூதி மன்னரே முன்வந்து சுமார் 653,000 சவூதி ரியால்கள் குருதிப்பணம் செலுத்தியதால் அந்த இந்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சலீம் பாஷா, சவூதியின் தெற்குப் பிராந்தியமான கமீஸ் முஷைத் என்னும் நகருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஓட்டுநர் பணிக்கு வந்தார். கட்டுமான கற்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்த அவருடைய வாழ்வில் அந்த விபத்து ஒரு திருப்பு முனையானது. டிராக்டர் ட்ரெய்லர் ஓட்டிய பாஷா,
நெடுஞ்சாலையில் மினி வேன் ஒன்றுடன் பிப் 11, 2006 அன்று மோதியதில், எட்டு சவூதி பெண் ஆசிரியைகளும், ஒரு எகிப்திய வாகன ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாஷா மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டு பாஷா சிறை வைக்கப்பட்டார்.
திட்டமிடாமல் விபத்தாக நிகழ்ந்த மரணங்கள் என்பதால், குருதிப் பணம் கொடுத்தால் பாஷா விடுதலை செய்யப்படலாம் என்ற நிலை. மாதச் சம்பளம் சவூதி ரியால்கள் 1,200 மட்டுமே பெற இந்தியாவிலிருந்து கடல் கடந்த பாஷாவுக்கு இது மிகவும் மாபெரும் தொகை. என்ன செய்வது? பாஷாவுக்கு யார் உதவ முன்வருவர் என்று காலம் கழிந்து வந்த நிலையில் எதிர்பாரா திருப்பமாக, சவுதி மன்னர் அப்துல்லாஹ்வே அந்தக் குருதிப் பணம் 653,000 ரியால்களையும் செலுத்தி பாஷா விடுதலை ஆக வழி கோலியுள்ளார். பாஷாவின் விடுதலைக்கு முயற்சி செய்த சக இந்தியரான சமூக சேவகர் அஷ்ரஃப் குட்டிச்செல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
விடுதலை அடைந்த பாஷா கண்ணில் நீர் மல்க தனது விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், உடனடியாக மக்கா சென்று உம்ராஹ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றி தனது விடுதலைக்கு உதவிய மன்னருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டுள்ளார்.
"விபத்து நடந்தால் தப்பி ஓடாமலும், உண்மையை ஒப்புக்கொள்வதும்,குடித்துவிட்டு வாகனம் ஓட்டாமலிருப்பதும், குருதிப் பணம் தந்து விடுதலைப்பெற வழி வகுக்கும் " என்றார் சலீம் பாஷா. விடுதலையான பாஷா விரைவில் பெங்களூரு திரும்ப உள்ளார். 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக