செவ்வாய், பிப்ரவரி 26, 2013

எகிப்தில் சுற்றுலாப் பயணிகளுடன் பறந்த பலூன் நடுவானில் தீப்பிடித்து விழுந்தது: 18 பேர் இறந்தனர்


எகிப்தில் உள்ள புராதன நகரமான லக்சோர், சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலூன் சவாரியை அதிகம் விரும்புவார்கள்.
சூடான காற்று நிரப்பப்பட்ட பலூனில் பறந்தபடி பள்ளத்தாக்கு மற்றும் புகழ்பெற்ற லக்சோர், கர்நாக்கில் உள்ள கோவில்களை சுற்றிப் பாப்பார்கள். காலையில் இந்த பலூன் சவாரி நடைபெறும்.

இந்நிலையில் இன்று லக்சோரில் சுமார் 20 வெளிநாட்டு பயணிகள் ஒரு பலூனில் உற்சாகமாக பறந்து கொண்டிருந்தனர். தரையில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பலூன் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் காற்றுப்பை பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் மின்னல் வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்த பலூன், அல்-தாபா கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் விழுந்தது. இதில், பலூனில் பயணம் செய்த பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த 18 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள். உடல்கள் கரும்பு தோட்டத்தில் சிதறி கிடந்தன. 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு எகிப்து நாட்டுக்காரர் ஆகியோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எகிப்தில் சுற்றுலாப் பயணிகள் சந்தித்த மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2006-ல் செல்போன் கோபுரம் மீது பலூன் மோதியதில் 16 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இதேபோல் நடந்த மற்றொரு விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக