நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட குறும்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவிலும் தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த குறும்படத்தை தயாரித்தவரை அமெரிக்க அரசு கைது செய்து தண்டனை விதிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், இந்த குறும்படத்தை தயாரித்த எகிப்து - அமெரிக்கரான நகோலா பேஸலே நகோலாவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முஸ்லிம் நாடுகளில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதையொட்டி, அமெச்சூர் குறும்பட தயாரிப்பாளரான நகோலா பேஸலே நகோலாவை, லாஸ் ஏஞ்செல்ஸ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து லாஸ் ஏஞ்செல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது லாஸ் ஏஞ்செல்ஸ் சிறைச்சாலையில் நகோலா, தண்டனை அனுபவித்து வருகின்றார். மேற்கண்ட குறும்படத்தை தயாரித்த நகோலா, மற்றும் அந்தப் படத்தை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்து பரவச்செய்த எகிப்து நாட்டினர் 6 பேர், என மொத்தம் 7 நபர்கள் மீது எகிப்து நாட்டின் கெய்ரோ நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.
லாஸ் ஏஞ்செல்ஸ் சிறையில் நகோலா, தற்போது தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இன்டர்நெட் மூலம் குறும்படத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். கெய்ரோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை இன்று நடந்தது. உடனடியாக தீர்ப்பும் வழங்கப்பட்டது.
இஸ்லாம் மதத்தையும், அந்த மதத்தில் தூதரையும் இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்து வெளியிட்ட 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து, நீதிபதி சய்ப் அல்-நஸ்ர் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கின் அணைத்து கட்ட விசாரணையின் போதும் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில், யாரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை.
எனினும், ஆளில்லா நிலையில் (அப்சென்டியா) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தண்டனை குறித்து எகிப்தில் உள்ள காப்டிக் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம், எந்த கருத்தையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. தனது பெயர் வெளியிடப்படுவதை விரும்பாத தேவாலயத்தின் அலுவலர் ஒருவர், 'அந்த குறும்படத்திற்கு எங்கள் தேவாலயம் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவுகளின் மீது எங்கள் தேவாலயம் கருத்து கூறுவதில்லை' என்று கூறியுள்ளார். இதையொட்டி, லாஸ் ஏஞ்செல்ஸ் சிறையிலிருந்து நகோலா விடுதலையாகி வெளியே வரும் போது, அவரை எகிப்து அரசு கைது செய்து மரண தண்டனையை நிறைவேற்றும் என எதிர்பாக்கப்படுகின்றது. தலைமறைவாக இருக்கும் 6 பேர்களுக்கும் பிடிப்பட்ட பின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக