வியாழன், நவம்பர் 29, 2012

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அப்சல் குருவுக்குத் தூக்கு?

டெல்லி: குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அப்சல் குருவை தூக்கிலிடலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.கசாப் தூக்கிலிடப்பட்ட பின்னர் டிவிட்டரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த கருத்தில், அப்சல் குரு என்னாச்சு என்று கேட்டிருந்தார். இதனால் இந்த விவகாரத்தை சட்டசபைத் தேர்தலில் பெரிய அளவில் பிரசார கருவியாக அவர் பயன்படுத்தலாம்
என்று காங்கிரஸ் கருதுகிறது. எனவே அங்கு கிடைக்கும் ஒரு சில இடங்களுக்கும் கூட பெரும் பாதிப்பு வந்து விடுமோ என அது அஞ்சுகிறது.எனவே மோடியின் வாயை அடைக்கும் வகையில்

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அப்சல் குருவையும் தூக்கிலிட மத்திய அரசு முடிவு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.தற்போது அப்சல் குரு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு 3வது எண் சிறையில் அப்சல் குரு அடைக்கப்பட்டுள்ளார். அந்த சிறைக்குள் அப்சல் குருவைத் தூக்கிலிடுவது தொடர்பான பணிகள் ரகசியமாக தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.கசாப் தூக்கிலிட்ட அடுத்த நாளே, அப்சல் குருவின் கருணை மனுவை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பி வைத்தார். அந்த கோப்பு வந்ததும் 48 மணி நேரத்தி்ல் முடிவெடுக்கப்படும் என்று ஷிண்டேவும் கூறியுள்ளார். ஏற்கனவே அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சராக முன்பு இருந்த ப.சிதம்பரம் குடியரசுத் தலைவருக்கு முன்பே பரிந்துரைத்திருந்தார். தற்போதும் அதுபோன்ற பரிந்துரையே ஷிண்டேவிடமிருந்தும் போகும் என்று தெரிகிறது.எனவே கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அப்சல் குருவும் கசாப் பாணியில் ரகசியமாக தூக்கிலிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.குருவைத் தூக்கிலிடுவதன் மூலம் மோடியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக பாஜகவின் வாயையும் சேர்த்து அடைக்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிடுகிறதாம்.குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக