லண்டன்: அயர்லாந்தில் இறந்த கருவை அகற்ற மருத்துவர்கள் மறுத்ததால் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவரான சவிதா பரிதாபமாக இறந்தார். அயர்லாந்தில் பணியாற்றுபவர் இந்தியரான பிரவீன் ஹாலப்பானாவர். அவரது மனைவி சவிதா (31). பல் மருத்துவர். 17 வார கர்ப்பமாக இருந்த சவிதாவுக்கு கடந்த மாதம் திடீர் என்று குறுக்கு வலி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவரது கரு இறந்துவிட்டது. உடனே அவர்கள் மேற்கு அயர்லாந்தில் உள்ள
யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல் கால்வேவுக்கு சென்று கருவை அகற்றுமாறு மருத்துவர்களை கேட்டுள்ளனர்.
அதற்கு அங்குள்ள மருத்துவர்கள் கரு இறக்கவில்லை என்றும், தங்களுக்கு அதன் இதயத்துடிப்பு கேட்பதாகவும் தெரிவித்து கருவை அகற்ற மறுத்துவிட்டனர். மேலும் அயர்லாந்து கத்தோலிக்க நாடு என்பதால் கருக்கலைப்பு செய்யமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சவிதா எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் கருவை அகற்றவில்லை.
இதையடுத்து இறந்த கருவால் அவருக்கு செப்டிக் ஆகி கடந்த மாதம் 28ம் தேதி இறந்தார். தாயின் உயரைக் காக்க வேண்டும் என்றால் மட்டுமே அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வார்கள். இல்லையென்றால் அங்கு கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமாகும்.
சவிதாவின் மரணம் குறித்து அயர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து கருக்கலைப்பு விதிகளை சற்று தளர்த்தக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் அயர்லாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே நேற்று பேரணி நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக