மும்பை:ஹிந்துத்துவா சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மறைவிற்காக நடத்தப்பட்ட முழுஅடைப்பிற்கு, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய பெண் கைது செய்யப்பட்டதை கண்டித்து மஹாராஷ்டிரா முதல்வருக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார். மஹராஷ்டிரா முதல்வர் சவாணுக்கு கட்ஜூ
அனுப்பியுள்ள கடிதத்தில்; “மத உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பந்த்துக்கு எதிராக கருத்து தெரிவித்தால், அது மத உணர்வை புண்படுத்துவதாக கூறுவது என்பது என்னைப் பொறுத்த வரையில் மோசமானது.
அரசியல் சாசனத்தின் 19(1) ஆவது பிரிவு, கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்துகிறது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோமே தவிர, பாசிச சர்வாதிகார நாட்டில் அல்ல.
அரசியல் சாசனத்தின் 341 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் படி பார்த்தால், உண்மையில் இந்த கைதே ஒரு கிரிமினல் செயலாக தோன்றுகிறது. தவறாக ஒருவரை கைது செய்வதோ அல்லது ஒருவரை குற்றம் புரிந்ததாக தவறாக சேர்ப்பதோ குற்றமாகும்.
எனவே குறிப்பிட்ட அப்பெண்னை கைது செய்த காவல்துறை மற்றும் கைது செய்ய உத்தரவிட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்வதோடு, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதை செய்ய தவறினால், அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணம் எடுத்த நீங்கள், உங்கள் மாநிலத்தை நீங்கள் ஜனநாயக முறையில் நடத்த இயலாத நிலையில் உள்ளீர்கள் என்ற எண்ணத்திற்கு நான் வர நேரிடும். அதன் பின்னர் அதன் சட்ட விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும்” என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
இதனிடையே இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த பெண்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக பால்தாக்கரே மறைவை தொடர்ந்து மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது. இதனை விமர்சித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், “தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?” என்று கருத்து பதிந்த பெண்ணும், அதற்கு ‘லைக்’ போட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் மத உணர்வுகளை புண்படுத்தியது மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட அந்த பெண் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, மன்னிப்புக் கோரியபோதிலும், சிவசேனா பயங்கரவாதிகள் அந்த பெண்ணின் உறவினர் நடத்தி வரும் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக