வெள்ளி, நவம்பர் 30, 2012

ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டனர் : காலி குடத்துடன் திரும்பிய ஜெயா !

சென்னை: காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. காவிரி பிரச்சனை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் தங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க தமிழக முதல்வர்
ஜெயலலிதாஇன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பி 2.15 மணிக்கு பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.ஏல். விமான நிலையத்தை வந்தடைந்தார் மதியம் 3 மணிக்கு பழைய விமான நிலைய சாலையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்த ஜெயலலிதா அங்கு ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்ட அமைச்சர் சுரேஷ் குமார், கர்நாடக தலைமைச் செயலாளர் ரங்கநாத் ஆகியோர் ஷெட்டருடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவுடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், உளவுத்துறை ஐஜி அமரேஷ் பூஜாரி உள்பட 10 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக அடுத்த 6 நாட்களுக்கு மட்டுமே தேவையான நீர் உள்ளது. இதன் பின்னர் நீர் இல்லாவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிவிடும்.
இதனால் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 30 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கர்நாடகத்தின் தேவைக்கே தண்ணீர் போதாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஷெட்டர் கராராகத் தெரிவித்துவிட்டார். இரு தரப்புக்கும் இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் 2 மணி நேரம் நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை வெறும் 55 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
அடுத்த 15 நாட்களில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடக் கோரினோம். ஆனால் கர்நாடக முதல்வர் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிட முடியாது என கூறிவிட்டார். அதனால் நாங்கள் மீண்டும் நாளையே உச்ச நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம் என்றார்.
கர்நாடகாவுக்கே தண்ணீர் இல்லை-ஜெகதீஷ் ஷெட்டர்:
பின்னர் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக அணைகளில் 30 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் 20 டிஎம்சி தண்ணீர் பெங்களூரு நகர மக்கள் குடிநீர் தேவைக்குப் பயன்படுகிறது. கர்நாடகாவுக்கே தண்ணீர் இல்லாததால்தான் தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இரு மாநில பாசனத்துறை நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட ஜெயலலிதா சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, கர்நாடக முதல்வருடன் பேசியதை விவரித்தார்.
120 அடி கொள்ளளவு உள்ள மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி வெறும் 47.81 அடி நீர் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெட்டர் ஏற்கனவே கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கொடுக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் உள்ளார். எதியூரப்பா நாளை பாஜகவில் இருந்து விலகி வரும் டிசம்பர் 9ம் தேதி புதுக் கட்சி துவங்குகிறார். அவருடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகப் போவதாக சில எம்.எல்.ஏக்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இப்படி கழுத்தளவு பிரச்சனைகளுடன் இருக்கும் ஷெட்டர் காவிரிப் பிரச்சனையில் மசியமாட்டார் என்று ஏற்கனவே கூறப்பட்டது போன்று தான் நடந்துள்ளது.
தமிழக கோரிக்கையை ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்றால் எதியூரப்பா, காங்கிரஸ், தேவ கெளடா அண்ட் கோ தன்னை குறி வைத்துத் தாக்கும் என்பதால் ஓட்டுகளுக்கு பயந்து பாஜக அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து தமிழகத்துக்கு விரோதமாகவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக