திங்கள், நவம்பர் 19, 2012

துப்பாக்கி படத்திற்கெதிராக மீண்டும் போராட்டம் !

சென்னை:சர்ச்சைக்குரிய ‘துப்பாக்கி’ படத்தின் முஸ்லிம் விரோத காட்சிகளை முழுமையாக நீக்கவில்லை என்று கூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பாக அண்மையில் தீபாவளி தினத்தில் ‘துப்பாக்கி’ என்ற திரைப்படம் தமிழகம்
உள்பட பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டது. இப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அவதூறான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.
இதனைத்தொடர்ந்து தமிழக முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு முற்றுகையிடப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சென்னையில் இப்பிரச்னை குறித்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினருடன், படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இக்கூட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ, த.மு.மு.க உள்ளிட்ட 24 முஸ்லிம் அமைப்புகள் சார்பாக 10 பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அக்காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி அக்காட்சிகளை தாங்கள் நீக்கியதாக நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் படக்குழுவினர் நீக்கியதாக தெரிவித்த புதிய படப் பதிவிலும் அக்காட்சிகளை முழுமையாக நீக்கவில்லை என்று கூறி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் அலுவலகம் மற்றும் வீடுகளை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக