சனி, நவம்பர் 17, 2012

பாகிஸ்தான் ரெயில்வேயை லாலுவிடம் ஒப்படைக்கலாம் !

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் தேசிய சபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, ரெயில்வே செயல்பாடுகள் தொடர்பாக தொடர்பான கேள்விகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நோமன் இஸ்லாம் ஷேக் பதில் அளித்தார். அப்போது, 'ரெயில்வேயை மேம்படுத்தி லாபகரமாக நிர்வகிக்க புதிய என்ஜின்கள் வாங்க வேண்டும். 69 ரயில் என்ஜின்கள் வாங்குவதற்கு ரெயில்வே துறை டெண்டர் விட்டுள்ளது. உற்பத்தி அல்லாத செலவுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வரவுக்கேற்ப செலவு செய்யப்படும். 2010-2011 நிதியாண்டிற்கு ரெயில்வேயின் நிதி தேவை ரூ.1100 கோடி. ஆனால் ரூ.600 கோடி தான் கிடைத்தது. தேசிய வங்கியிடம் கடன் பெற்று, 96 என்ஜின்கள் பழுது பார்க்கப்படும். இருப்பினும் ரெயில்வேயை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை’ என்று ஷேக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முட்டாஹிதா குவாமி இயக்க உறுப்பினர், ‘ரெயில்வே நிர்வாகத்தில் உள்ள எண்ணற்ற பிரச்சினைகளை அரசால் சமாளிக்க முடியாவிட்டால், ரெயில்வே பொறுப்பை முன்னாள் இந்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவிடம் ஒப்படையுங்கள்’ என்று ஆவேசமாக கூறினார்.

நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் ரெயில்வே துறை பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ரெயில்கள் பற்றாக்குறை, எரிபொருள் மற்றும் உதிரி பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக