புதன், நவம்பர் 28, 2012

’சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியில் கணவன் சுட்டுக் கொலை! அச்சத்தில் மனைவி !

மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தங்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பிருப்பதால் தான் கொல்லப்பட கூடும் என முன் கூட்டியே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய இளம் கணவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கி வந்த ’சத்யமேவ்
ஜெயதே’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் பங்கு பெற்றிருந்த 28 வயதான அப்துல் ஹக்கீம், 26 வயதான மெவிஷ் ஆகிய திருமண தம்பதியினர் தமது பெற்றோரின் அனுமதியின்றி இரகசிய திருமணம் செய்து கொண்டதால் தமது உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறியிருந்தனர். இவர்கள், கடந்த மே மாதம் முதல் NGO ஒன்றின் பாதுகாப்பின் கீழ் இருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர், உத்தரபிரதேசத்தின் புலாந்த்ஷாஹ்ர் மாவட்டத்திற்கு ஹக்கீமின் தாயை பார்ப்பதற்காக இருவரும் வந்திருந்தனர். ஹகீமின் மனைவி 9 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். ஏற்கனவே அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒர் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காவல்நிலையத்திலிருந்து திரும்பிய போது ஹகீம் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஹகீம் தாழ்ந்த ஃபகீர் சமூகத்திலிருந்து வந்தவர் எனக்கூறி அவரை மெவிஷின் குடும்பத்தினர் வெறுத்திருந்தனர். இதனால் மெவிஷின் சகோதரர்களே ஹகீமை சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகம் வலுப் பெற்றிருக்கிறது. முன்னதாக ஹகீமின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையில் தகவல்கள் பதியப்பட்டிருந்தன.
தற்போது ஹகீமின் கொலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் அமீர் கான், ”’தமது நிகழ்ச்சிக்கு வரும்முன்னரே குறித்த தம்பதியினர் தமக்கு உயிராபத்து இருப்பதாக அச்சம் வெளியிட்டிருந்தனர். இந்த படுகொலைச் சம்பவம் மிக வெட்கக்கேடானதுடன், துரதிஷ்டவசமானது. இது தொடர்பில் உத்தரபிரதேச அரச கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன். ஹகீமின் குடும்பத்திற்கும் மெவிஷிற்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே அந்த இளம் விதவையாகி விட்ட பெண்ணின் இருப்பிடமான மீரட் போய் போலீஸிடம் இதன் சீரியளை எடுத்துக் கூறி விட்டு வந்துள்ளேன்’” என்றார்.
எனது கிராம மக்களே எங்களை கொல்ல ஆயுதம் எடுத்திருக்கிறார்கள்.அநேகமாக நான் தான் அவர்களது அடுத்த இலக்காக இருக்கலாம் என மெவிஷ் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக