வெள்ளி, நவம்பர் 16, 2012

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் உயர் தலைவர் படுகொலை !

காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஹமாஸின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் பிரிகேடின் முக்கிய கமாண்டர் அஹ்மத் அல் ஜஃபரி(வயது52) இஸ்ரேலின் அநீதமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். காஸ்ஸாவில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் கொலைச் செய்யப்படும் மிக உயர் தலைவர்
ஜஃபரி ஆவார். இஸ்ரேலின் கொலைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் ஜஃபரி. காஸ்ஸாவில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஓட்டுநருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஆறு ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்ஸாவில் கடந்த ஒரு வார காலமாக நடந்துவரும் இஸ்ரேலின் அடாவடி தாக்குதலில் ஏழு ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் ஹமாஸின் தலைவர்கள் மீதும் தொடரும் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜஃபரி கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
காஸ்ஸாவில் சுஜாஇய்யா மாவட்டத்தில் 1960-ஆம் ஆண்டு பிறந்த ஜஃபரி, காஸ்ஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றவர். இஸ்ரேல் சிறைகளில் வாடும் ஃபலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பாடுபடும் நூர் அசோசியேசனின் ஸ்தாபக தலைவர் ஜஃபரி ஆவார்.
ஃபலஸ்தீன் முன்னாள் அதிபர் யாஸர் அரஃபாத்தின் தலைமையில் ஃபத்ஹ் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த வேளையில் 13 ஆண்டுகளை சிறையில் கழித்தார். 2000-2007 காலக்கட்டத்தில் ஹமாஸ் துவக்கிய 2-வது இன்திபாழாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையேற்றவர் ஜஃபரி ஆவார்.
அதேவேளையில்,ஆக்கிரமிப்பு சக்திகள் நரகத்தின் வாசலை திறந்துள்ளதாக ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜஃபரியின் மரணம் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக மாறும் என்று இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் தெரிவித்துள்ளது.
காஸ்ஸாவில் நடக்கும் அனைத்து போராளி நடவடிக்கைகளுக்கு காரணம் ஜஃபரி ஆவார் என்றும், அவர் பல காலமாக தங்களால் குறி வைக்கப்பட்டவர் என்றும் சியோனிச பயங்கரவாத இஸ்ரேலின் ராணுவச் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக