வியாழன், நவம்பர் 29, 2012

ஃபேஸ்புக்வாசிகளை அலறவைக்கும் ஐ.டி.ஆக்ட் 66 (A) - துஷ்பிரயோகத்தை தடுக்க மத்திய அரசு அறிவிக்கை

டெல்லி : ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்துவிட்டு சிறைக் கம்பி எண்ணக் கூடியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 (A) ஐ நடைமுறைப்படுத்த சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.ஐ.டி. ஆக்ட் 66 (A)- இது ஃபேஸ்புக் ,
ட்விட்டர்
போன்ற சமூக வலைதளங்களில் 'ஹாயாக' கருத்துகளைப் பதிவிட்டு வந்தவர்களை அலற வைத்திருக்கும் சட்டப் பிரிவு! நினைத்த கருத்தையெல்லாம் பதிவு செய்வது என்பது தற்போதைய இந்த சட்டப் பிரிவின் கீழ் குற்றம் என்பதால் உள்ளூர் போலீசாரே சட்டென ஒருவரை தூக்கி சிறைக்குள் போட்டுவிடும் நிலை இருக்கிறது!


மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிரான கார்ட்டூன்களை போட்டவர்களாகட்டும்.. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான கருத்து தெரிவித்தரவாகட்டும்.. சின்மயி விவகாரமாகட்டும் ... பால்தாக்கரே, ராஜ்தாக்கரே விவகாரங்கள் ஆகட்டும் அனைத்திலும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளவாசிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது இந்த சட்டப் பிரிவு...
இந்த சட்டப் பிரிவின் உச்சவெறியாட்டமாக கருதப்படுவது பால்தாக்கரே மறைவையொட்டி அறிவிக்கப்படாத முழு அடைப்பு மும்பையில் நடைபெறுகிறது.. இது தேவையில்லை என்று மட்டுமே கருத்து சொன்னதற்காக இரு இளம்பெண்கள், மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி தூக்கியது போலீஸ்! கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை சட்டென நெறிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடுமையான தொனியில் குரல் கொடுத்தார் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டே கட்ஜூ. இதனால் இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இடமாற்றம் செய்யப்பட்டார்! காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்!
மகாராஷ்டிராவில் இந்த களேபரம் முடிவதற்குள் இன்னொரு ஃபேஸ்புக் அரெஸ்ட்! ராஜ்தாக்கரேவை யாரோ ஒருவன் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் போட்டுவிட இளைஞர் ஒருவர் சிக்கிக் கொண்டிருக்கிறார்!
மத்திய அரசு நடவடிக்கை
இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஐடி ஆக்ட் 66 (A) தொடர்பாக மத்திய அரசு, வழிகாட்டுதல் நெறிமுறைகளை திடீரென வெளியிட்டுள்ளது. அதாவது இந்த சட்டப் பிரிவின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் துணை கமிஷனர் அல்லது ஐஜி தலைமையிலான அதிகாரிகளின் ஒப்புதல் அவசியம் என்று கூறியுள்ளது.
திடீரென மத்திய அரசு இப்படி ஒரு வழிகாட்டு நெறிமுறையை வெளியிடக் காரணமும் இருக்கிறது..
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த ஐடி ஆக்ட் 66(A) பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஷிரேயன்ஸ் சிங்கால் என்பவர் பொதுநலன் வழக்கைத் தொடந்துள்ளார். இந்த வழக்கின் கீழ் ஐ.டி.ஆக்ட் 66(A)- அரசியல் சாசனத்துக்குட்பட்டதா என்பதை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
ஏற்கெனவே இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, "இப்படியான ஒரு சட்டப்பிரிவை எதிர்த்து ஏன் எவருமே பொதுநலன் வழக்கைத் தாக்கல் செய்யவில்லை.. நாங்களே தன்னிச்சையாகவே இந்த வழக்கை எடுத்து விசாரிக்கலாமா? என யோசித்தோம்" என்று தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் எங்கே உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையின் போது செம காட்டம் காட்டிவிடுமோ என்ற அச்சத்தில் திடீரென்று இன்று இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது என்று கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக