அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. காலையில் வெகுநேரம் வரையிலும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில இடங்களில் ஒளிபுக முடியாத வகையிலும் பனி மூட்டம் காணப்படுகிறது. இவ்வாறு கடும் பனிமூட்டம் காரணமாக, டெக்சாஸ் மாகாணத்தின்
தென்கிழக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதின. சுமார் 150 வாகனங்கள் வரை மோதியதால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. கார்கள் ஒன்றுக்குமேல் ஒன்று ஏறி உருண்டன. வாகனங்களில் இருந்தவர்கள் காயமடைந்து தங்களைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர். காயமடையாத டிரைவர்கள் மற்றவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சங்கிலித் தொடர் விபத்தில், டிராக்டர் டிரெய்லரில் சிக்கிய 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 90 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்து பற்றி தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் அந்த இடத்திற்கு வந்து, சிதறிக் கிடந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதனால் 8 மணி நேரத்திற்குப் பிறகே அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக