வியாழன், நவம்பர் 29, 2012

காவிரி பிரச்சனை: பெங்களூரிலிருந்து ஜெயலலிதா வெறுங் குடத்துடன் தான் திரும்புவார்?

சென்னை: காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று பெங்களூர் செல்லும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெறும் கையோடு தான் திரும்புவாரா என்று தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் தங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
அறிவுறுத்தியது. இதையடுத்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 1.15 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூர் புறப்படுகிறார். மதியம் 2.15 மணிக்கு அவர் பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.ஏல். விமான நிலையத்தில் இறங்குகிறார். மதியம் 3 மணிக்கு லீலா பேலஸ் ஹோட்டலில் ஷெட்டரை ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். பின்னர் இன்று மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.
ஷெட்டர் ஏற்கனவே கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கொடுக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் உள்ளார். எதியூரப்பா நாளை பாஜகவில் இருந்து விலகி வரும் டிசம்பர் 9ம் தேதி புதுக் கட்சி துவங்குகிறார். அவருடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகப் போவதாக சில எம்.எல்.ஏக்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இப்படி கழுத்தளவு பிரச்சனைகளுடன் இருக்கும் ஷெட்டர் காவிரிப் பிரச்சனையில் மசியமாட்டார் என்று கூறப்படுகிறது.
மேலும் வட கர்நாடகத்தைச் சேர்ந்த ஷெட்டர் தென் கர்நாடகத்தில் உள்ள காவிரி பகுதி மக்களின் உணர்வுகளை நோகடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜெயலலிதா கேட்கும் அளவுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஷெட்டர் ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
தமிழக கோரிக்கையை அவர் ஏற்றால் அவரை எதியூரப்பா, காங்கிரஸ், தேவ கெளடா அண்ட் கோ கர்நாடக விரோதியாக சித்தரிக்கும். இதனால் ஓட்டுகளுக்கு பயந்து பாஜக அரசு இந்த விஷயத்தில் தொடர்ந்து தமிழகத்துக்கு விரோதமாகவே செயல்படும் என்றே தெரிகிறது.
120 அடி கொள்ளளவு உள்ள மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி வெறும் 47.81 அடி நீர் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக