புதுடெல்லி:காஸ்ஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையிலான கடுமையான நிறவெறிப்பிடித்த
இஸ்ரேலிய அரசு, முஸ்லிம்களை இனப்படுகொலையை நிகழ்த்த முயற்சிக்கிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டுப் படுகொலைகளையும், அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும் இதற்காக நெதன்யாகு அரசு நடத்தி வருகிறது.
சர்வதேசச் சட்டங்களை மீறும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் கூட்டுப் படுகொலைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது பரிதாபகரமானது. தாக்குதல்களுக்கு தலைமை வகிக்கும் இஸ்ரேலிய தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நேரம் வந்துவிட்டது.
இஸ்ரேல் நடத்தி வரும் கூட்டுப் படுகொலைகளை தடுத்து நிறுத்த ஐ.நா தலையிடவேண்டும். காஸ்ஸா மீதான தாக்குதலை நிறுத்த இந்தியா இஸ்ரேலுக்கு நிர்பந்தம் அளிக்கவேண்டும். ஃபலஸ்தீன் மக்களுக்கு சுதந்திர நாடு என்ற கொள்கைக்கு ஆதரவு அளித்த நாடு இந்தியா என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் உணரவேண்டும். நமது முன்னோர்களான மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் இஸ்ரேல் உருவாகுவதை எதிர்த்தவர்கள் ஆவர். இஸ்ரேலை எல்லாவகையிலும் எதிர்க்கவும், ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சர்வதேச சமூகம், குறிப்பாக அரபு நாடுகள் தயாராகவேண்டும்.
சுதந்திர தேசத்திற்காக போராடும் ஃபலஸ்தீன் மக்களின் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முழு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் தெரிவிக்கிறது. இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக