திங்கள், நவம்பர் 19, 2012

பழங்குடியினரை மாவோயிஸ்டுகள் என்ற பெயரால் படுகொலைச் செய்யும் போலீஸ் !

பர்ஹாம்பூர்:ஒரிஸ்ஸாவில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரால் நிரபராதிகளான பழங்குடியினரையும், தலித் மக்களையும் போலீஸ், போலி என்கவுண்டர்களில் கொலைச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இம்மாதம் 14-ஆம் தேதி கண்டமால்-கஜபதி வன எல்லையில் 5 பேர் இவ்வாறு போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டதாக கண்டமால் வனவாசி சுரக்‌ஷா பரிஷத், ஒரிஸ்ஸா ஆதிவாசி மஞ்ச், ஒரிஸ்ஸா மாநிலத்தில் போலி
வழக்குகளுக்கு எதிராக இயங்கும் பிரச்சார சமிதி ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டினர்.
கிராமப் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலரான அயூப் பத்ரா, ஷியாம்சன்மஜ்ஹி, காஸிராம் பாக்சிங் ஆகியோர் பிராஹ்மணிகாம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஸிராம் பாக் சிங் கடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிப் பெற்றவர் ஆவார். கிராம பஞ்சாயத்து சர்பஞ்ச்(தலைவர்) கமலா பத்மஜியும், அவருடைய கணவரும் சேர்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் அரிசியை கடத்துவதற்கு எதிராக காஸிராம் பாக் சிங் மக்களை திரட்டி கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர். புகாரைத் தொடர்ந்து போலீஸார், அரிசியை கைப்பற்றி ஓட்டுநரை கைது செய்தனர். தொடர்ந்து கைதான கமலா பத்மஜியும், அவரது கணவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கமலா பத்மஜியின் உறவினர்களையும் கைது செய்யவேண்டும் என்று கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ப்ளாக் ஆபிஸின் முன்னால் தர்ணா போராட்டம் நடத்தியிருந்தனர். அயூப் பத்ராவும் இது போன்ற போராட்டங்களுக்கு தலைமை வகித்திருந்தார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான அரிசியை கடத்தும் தகவல் வெளியானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்களுக்கு எதிராக கமலா பத்மஜியின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். பஞ்சாயத்து தலைவரின் ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மாவோயிஸ்டுகள் என்று போலியான ஆதாரங்களை செட்டப் செய்து ஊழல் கும்பல் போலீசாருடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி அவர்களை கொலைச் செய்துள்ளனர் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துக, போலீசின் போலி என்கவுண்டர் கொலைகளுக்கு எதிராக வழக்கு பதிவுச்செய்க, கொலைச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குக ஆகிய கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர். இவ்வமைப்புகளின் பிரதிநிதிகளாக நரேந்திர மொஹந்தி, ஜுனேஷ் பிரதான், பிக்ரம் மாலிக் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக