புதுடெல்லி:சி.பி.ஐ புதிய இயக்குநர் நியமன விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை பா.ஜ.க சஸ்பெண்ட் செய்துள்ளது.கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் மேலும் கூறியது: “சிபிஐ-யின் புதிய இயக்குநராக
ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கடிதம் எழுதினர். இக்கடிதத்துக்கு ஜெத்மலானி எதிர்ப்பு தெரிவித்தார். அவருடைய இச்செயல் காங்கிரசுக்குத்தான் உதவும்.
என் மீது நடவடிக்கை எடுத்துப் பாருங்கள் என்று பாஜகவுக்கு ஜெத்மலானி ஞாயிற்றுக்கிழமை சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை பாஜக தலைவர் நிதின் கட்கரி தீவிரமாக எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்” என்று ஹுசைன் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் முன்னதாக “என் மீது நடவடிக்கை எடுத்துப் பாருங்கள்” என்று பாஜகவுக்கு சவால் விடுத்திருந்தார் ஜெத்மலானி.
“என் மீது நடவடிக்கை எடுத்தால் நான் அதை வரவேற்பேன். என் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பாஜகவில் யாருக்கும் தைரியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். இந்த விஷயம் தொடர்பாக கட்சித் தலைமையுடன் பேசமாட்டேன். கட்சியில் நான் சாதாரணமானவன். என் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா என்று என்னால் யூகிக்க முடியாது. ஆனால், உண்மையைக் கூறும் எனது நிலையைக் கட்டுப்படுத்த முடியாது. சிபிஐ இயக்குநர் நியமன விவகாரத்தில் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்தேன். எனது நிலைப்பாட்டுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக