வியாழன், நவம்பர் 22, 2012

காஸ்ஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது !

காஸ்ஸா:ஒருவாரத்திற்கும் மேலாக ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்கு தற்காலிகமான ஓய்வு. எகிப்தின் தலைமையில் நடந்த அமைதி முயற்சிகள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகளின் இறுதியில் நரவேட்டை உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஒருவார காலமாக காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்தி வந்த காட்டுமிராண்டித்தனமான
தாக்குதல்களில் 157 பேர் இறந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கையில் அதனை புறக்கணித்துவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 13 பேர் காஸ்ஸாவில் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது காஸ்ஸாவில் மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்பட்டது. காஸ்ஸாவின் மீது தரை வழியாகவும், வான் வழியாகவும் இஸ்ரேல் நடத்தி வரும் அனைத்து தாக்குதல்களை நிறுத்துமாறு புதிய ஒப்பந்தம் கூறுவதாக பி.பி.சி தெரிவிக்கிறது.
அதேவேளையில், இஸ்ரேலின் அனைத்து அத்துமீறல்களும் தோல்வியை தழுவியதாக ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார். எகிப்து நடத்திய சமாதான முயற்சிகளுக்கு மிஷ்அல் நன்றி தெரிவித்தார். ஹமாஸின்  முக்கிய கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக