கொழும்பு: இந்தியாவின் கடும் ஆட்சேபனை மற்றும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சீனாவின் உதவியுடன் தனது முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சுப்ரீம்சாட்-1 என்ற செயற்கைக் கோளை ஏவியுள்ளது இலங்கை. விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழப் போரில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பி்ன்னர் இந்தியாவை படு மோசமாக
நடத்த ஆரம்பித்துள்ளது. இந்தியாவை எப்படியெல்லாம் எரிச்சல்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்ய ஆரம்பித்துள்ளது. சீனாவின் கையை வைத்து நமது முகத்தை அவ்வப்போது குத்தி வருகிறது. நாம் சொல்வதை அது கேட்பதே இல்லை, கண்டு கொள்வதே இல்லை. இருந்தாலும் நமது மத்திய அரசு, இலங்கையிடம் எவ்வளவு குணிந்து போக முடியுமோ அவ்வளவு குணிந்து போய்க் கொண்டேயிருக்கிறது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் அதுகுறித்து இந்திய அரசு கவலைப்பட்டாலும் அதைத் தடுக்க முடியாத நிலையில்தான் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இலங்கை,சீனாவின் உதவியுடன் தனது முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த அரசு சார்பு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த செயற்கைக்கோளைசீனாவிலிருந்து ஏவியுள்ளது இலங்கை. இதனால் இந்தியா, இலங்கை இடையிலான உறவில் மேலும் கசப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செயற்கைக் கோள் ஏவுவதற்கு இந்தியா ஏற்கனவே கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. ஆனால், இதை இலங்கை நிராகரித்து விட்டது. இந்த செயற்கைக்கோள் ஏவும் திட்டம் முற்றிலும் தனியார் சம்பந்தப்பட்டது என்றும், இலங்கையைச் சேர்ந்த சுப்ரீம்சாட் என்ற தனியார் நிறுவனமும், சீனாவின் கிரேட் வால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து இதை மேற்கொண்டதாக இலங்கை கூறியுள்ளது.
இருப்பினும் இந்த செயற்கைக் கோளை உருவாக்கியது தான்தான் என்பது போல சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார் ராஜபக்சேவின் இளைய மகன் ரோஹிதா.
செயற்கைக் கோள் ஏவப்பட்டது குறித்து சுப்ரீம்சாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜீத் பெரீஸ் கூறுகையில், செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேற்கு சீனாவில் உள்ள ஜிசாங் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து செயற்கைக் கோள் ஏவப்பட்டது.
இலங்கை, சீனா இடையிலான நெருக்கமான உறவு இந்த செயற்கைக் கோள் மூலம் மேலும் வலுவடையும் என்றார்.
இந்த நிலையில் இலங்கையின் இந்த செயல் குறித்து டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வு மைய ஆய்வாளர் பிரம்மா செல்லனே கூறுகையில், சீனாவுடன் இலங்கை நிதானமாக அதேசமயம் வலுவாக நெருங்கி வருவதையே இது காட்டுகிறது. மேலும் இந்தியாவுக்கு இது மறைமுக எச்சரிக்கையுமாகும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருவதையும் இது வெளிக்காட்டுகிறது. இது நிச்சயம் நமக்கு நல்ல செய்தி அல்ல என்றார்.
ஏற்கனவே இந்தியாவை சுற்றி வளைத்து தனது நிலைகளை வலுப்படுத்தி வருகிறது சீனா. தற்போதுஇலங்கையை மையமாக வைத்து இந்தியாவுக்கு கடும் எரிச்சலையும், பாதுகாப்பு மிரட்டலையும் விடுத்து வருகிறது சீனா. தற்போதைய செயற்கைக் கோள் ஏவுதல், இந்தியாவுக்கு மேலும் பதட்டத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக