ஞாயிறு, நவம்பர் 18, 2012

எகிப்து:பள்ளிப் பேருந்தில் ரெயில் மோதி 51 பேர் மரணம் !

கெய்ரோ:எகிப்திய நகரமான அஸியூட்டில் பள்ளிப் பேருந்து மீது ரெயில் மோதியதில் மாணவர்கள் உள்பட 51 பேர் பலியானார்கள். நான்கு வயதிற்கும் எட்டு வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய 48 குழந்தைகள் பலியாகியுள்ளனர். 27 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அஸியூட் நகரத்தில் மன்ஃபுலட்டில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில் வந்து கொண்டிருந்த
போதுக்ராஸிங்கில் கேட்டை மூடவேண்டிய ஊழியர் தூக்கத்தில் இருந்ததால் மூடாமல் விட்டதாக தெரிகிறது. அப்போது பள்ளிக் குழந்தைகளை ஏற்றிய பேருந்து, ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அந்த நேரத்தில் கெய்ரோவிலிருந்து அஸ்வான் நகருக்கு சென்ற ரயில், பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து நொறுங்கியது.பணியின்போது தூங்கியதாக ரயில்வே கேட் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று போக்குவரத்து அமைச்சர் முஹம்மது ரஷாத் மற்றும் ரெயில்வே ஆணைய தலைவர் முஸ்தஃபா கெனாவி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை அதிபர் முஹம்மது முர்ஸி ஏற்பார் என்று செய்திகள் கூறுகின்றன. மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட காரியங்களுக்காக அதிபர் அமைச்சர்களை நியமித்துள்ளார். பிரதமர் ஹிஸாம் காண்டில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக