காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் 6-வது நாளாக கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் சூழலில் அங்குள்ள மருத்துவமனைகளில் கடுமையான மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது.இஸ்ரேலின் ராணுவ பலத்திற்கு சமமான பலம் காஸ்ஸாவில் இல்லாததால் அங்கு இழப்புகள் அதிகரிக்க காரணமாகியுள்ளது. இங்குள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாதது வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சுவது போன்றது என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. காஸ்ஸாவில் 17 லட்சம் மக்கள் வாழுகின்றார்கள். ஆனால் அங்கு24 மெடிக்கல் சென்டர்கள் மட்டுமே உள்ளன என்று ஃபலஸ்தீன் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐ.நாவின் ரிலீஃப் அண்ட் வர்க்ஸ் ஏஜன்சியின் 21 சுகாதார மையங்களும் உள்ளன. போதுமான ஊழியர்கள் இல்லாததும் இம்மையங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளன.
மருத்துவமனைகளில் 40 சதவீதம் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக காஸ்ஸாவில் அல்ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் ஜெனரல் மேதாத் அப்பாஸ் கூறுகிறார். இதில் அவசர நேரத்தில் தேவைப்படும் மருந்துகளும் அடங்கும். காயங்களுக்கு தையல் போடவும், முறிவை நேராக்கவும் தேவைப்படும் மருந்துகள் பல இடங்களில் இல்லை. ஒரு வாரத் தேவையான மருந்துகள் இருந்தபோதும் தாக்குதல் துவங்கியவுடன் அவை ஒரு நாளில் தீர்ந்துபோனது. காயமடைந்தவர்களில் பெரும்பாலோருக்கு எலும்புகள் முறிந்துள்ளன. சிலருக்கோ உடல் உறுப்புகளை துண்டிக்க வேண்டியுள்ளது.
போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படாவிட்டால் நிலைமைகள் மிகவும் மோசமாகும் என்று இப்பகுதியில் செயல்படும் மருத்துவ நிபுணர் கூறுகிறார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிட்சை அளிக்கவும், இதர காரியங்களுக்கும் கத்தர் அமீர் ஒரு கோடி டாலர் உதவி அளித்துள்ளார். இது எகிப்திய அரசு வழியாக நடைமுறைப்படுத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக