புதன், நவம்பர் 28, 2012

ஜெ. குறித்து அவதூறாக பேசியதாக மேட்டூர் தேமுதிக எம்எல்ஏ கைது !

சேலம்: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதுறாகப் பேசியதாகக் கூறி தேமுதிக மேட்டூர் தொகுதி எம்எல்ஏ பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல தேமுதிக மாவட்டச் செயலாளர் என்.ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் நேற்று முன்தினம் தேமுதிக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் சேலம் வடக்கு தேமுதிக எம்.எல்.ஏ அழகாபுரம் ஆர்.மோகன் ராஜ், மேட்டூர் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், கெங்கவல்லி எம்.எல்.ஏ சுபா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பேசிய துரை கருப்பழகி என்ற தேமுதிக பிரமுகர் முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசியபோது அங்கு திரண்டு வந்த அதிமுகவினர் கலாட்டா செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் முதல்வரை தரக் குறைவாகப் பேசியதாக எம்எல்ஏ சுபா உள்ளிட்ட தேமுதிகவினர் மீது அதிமுகவினர் தலைவாசல் போலீசில் புகார் செய்தனர். இதை போலீசார் விசாரித்து எம்.எல்.ஏ சுபா, தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், ஒன்றிய துணைச் செயலாளர் தங்கத் துரை, நிர்வாகிகள் துரை கருப்பழகி, சக்ரவர்த்தி, அருள்வேல், பெருமாள், முருகேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுவது, உணர்ச்சியை தூண்டி அமைதிக்கு பங்கம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் துரை கருப்பழகியை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இன்னொரு புகார்...
இந் நிலையில் நேற்று மாலை சாத்தப்பாடியை சேர்ந்த ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் தலைவாசல் போலீசில் மேலும் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் முதல்வரை அவதூறாகப் பேசி, வன்முறையை தூண்டும் அளவில் தேமுதிகவினர் கத்தியோடு வரவேண்டும் என்று பேசியிருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் பல பிரிவுகளில் வழக்குகள்...

இதையடுத்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், சுபா ஆகியோர் மீது போலீசார் சட்ட விரோதமாகக் கூடுதல்), அரசு அதிகாரிகள் கூறியும் மறியல் செய்தல், சட்ட விரோதமாக தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர்.

நள்ளிரவில் எம்எல்ஏ வீட்டுக்கு வந்த போலீஸ்...

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மேட்டூர் டிஎஸ்பி கோபால் தலைமையிலான போலீசார் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள எம்.டி.எஸ். நகரில் வசிக்கும் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் வீட்டிற்கு வந்தனர்.

எம்.எல்.ஏவின் மனைவி வெளியில் வந்து எம்.எல்.ஏ. வீட்டில் இல்லை என்றார். ஆனாலும் போலீசார் அதிகாலை வரை அங்கேயே காத்திருந்துவிட்டுத் திரும்பினர்.

இந் நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் எம்.எல்.ஏ. பார்த்திபன் வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.
மாவட்டச் செயலாளரும் கைது
இதே போல தேமுதிக மாவட்டச் செயலாளர் என்.ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பிற தேமுதிக எம்எல்ஏக்களான சுபா மற்றும் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்ய முயன்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக