செவ்வாய், நவம்பர் 13, 2012

தர்மபுரி கலவரம் திட்டமிட்ட செயல்: தேசிய ஆணையகுழு!

தர்மபுரி:  தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாயக்கன் கொட்டாயில் நடந்த கலவர திட்டமிட்ட செயல் என்று ஆதிதிராவிடர் தேசிய ஆணையக் குழுவின் தலைவர் பி.எல்.புனியா கூறியுள்ளார்.தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆதிதிராவிடர் தேசிய ஆணையக் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். பின்னர், அந்தக் குழுவின் தலைவர் பி.எல்.புனியா செய்தியாளர்களிடம் கூறியது:நாயக்கன்கொட்டாய் சம்பவம் வருந்தத்தக்கது. வன்முறை சம்பவத்துக்கு முன்பு உளவுத் துறையினர் சிறப்பாக செயல்படவில்லை.
இருவர் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் அல்ல. திட்டமிட்டு நடைபெற்ற தாக்குதல் ஆகும்.பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் இது. இந்த வன்முறைத் தாக்குதலால் ரூ.6.95 கோடி மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இனி இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறக் கூடாது. இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. முதல் நடவடிக்கையாக ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.34 கோடி வழங்கப்பட்டுள்ளது. முழுவதும் சேதம் அடைந்த 40 வீடுகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரப்படும். மேலும், பழுதடைந்த 175 வீடுகளுக்கு மொத்தம் ரூ.40.90 லட்சம் வழங்கப்படும்.மேலும், பழுதடைந்த வீடுகளை சீரமைக்கவும், புதிய வீடுகள் கட்டவும் சிறிது காலம் தேவைப்படும் என்பதால், அவர்கள் தங்குவதற்காக ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் 3 இடங்களில் தாற்காலிக தங்குமிடம் கட்டப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன்முறையை தடுக்கத் தவறிய டிஎஸ்பி உள்ளிட்ட 6 காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.பேட்டியின் போது, ஆணையக் குழுவின் உறுப்பினர் லதா பிரியகுமார், இயக்குநர் வெங்கடேசன், சேலம் காவல் சரக டிஐஜி சஞ்சய்குமார், மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி, எஸ்.பி. ஆஸ்ரா கர்க் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக