செவ்வாய், ஜூலை 08, 2014

இலங்கை வரும் போப் மன்னிப்பு கேட்க வேண்டும்: போதுபாலா சேனா

இலங்கையில் செயல்பட்டு வரும் போதுபாலா சேனா என்ற தீவிரவாதிகள் குழு எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இவர்கள் தங்களுடைய பேரணிகளில் எல்லாம் சிறுபான்மையினர் மீது வன்முறையைத் தூண்டிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி புத்த பெரும்பான்மை கொண்ட தங்கள் நாட்டின் தூய்மையைக் காக்குமாறு இலங்கை மக்களுக்கு அழைப்பும் விடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தூண்டிவிடுவதுவே இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் சமீபகாலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரங்களுக்குக் காரணமாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் குறிப்பிடுகின்றன.

இந்தத் தாக்குதல்களில் பலர் பலியானதோடு முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் போன்ற பல இடங்களும் சூறையாடப்பட்டன. இந்த புத்தமதக் கும்பல் முஸ்லிம் மக்களைத் தங்களின் தாக்குதலுக்கான இலக்காகக் கொண்டிருக்கும்போதும் நிதி ஊக்குவிப்புகள் மூலம் கிறிஸ்துவ தரப்பினரும் புத்த மதத்தினரை மதம் மாற்றிவிடுகின்றனர் என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த 1505-ம் ஆண்டிலிருந்து 1948-ம் ஆண்டு வரை இலங்கையில் தங்களின் காலனிகளைக் கொண்டிருந்த போர்ச்சுகீசியம், டச்சு மற்றும் பிரிட்டிஷ் அரசுகளையும் அவர்கள் குறை கூறுகின்றனர். ரோமன் கத்தோலிக்க மதத்தை போர்ச்சுகீசியம் இலங்கையில் துவக்கிய பின்னர் டச்சு மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் அவரவர் கிளைகளை இங்கு பரப்பின என்று இந்த புத்தப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு உள்ள அதே நிலைமை தங்களுக்கு இருந்ததாகக் கூறும் இவர்கள், கிறிஸ்துவ மதத்தினர் தங்கள் கோவில்களை அழித்து தங்களின் துறவிகளையும் பலியாக்கினர். இதற்கு முன்னால் இங்கு வந்த போப்பாண்டவர்கள் தங்கள் நாடுகளுக்காக மன்னிப்பு கோரினர். அதுபோல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்யும் போப் பிரான்சிஸ் தங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இங்கு நடந்த குற்றங்களுக்கு போப் என்ன பதில் சொல்லப்போகின்றார் என்பதற்கு நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம் என்று போதுபால சேனாவின் தலைவர்களில் ஒருவரான ரெவரென்ட் கலகோடா அட்டே ஞானசரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக