ஞாயிறு, ஜூலை 13, 2014

புலித்தோல் வர்த்தகம் செய்வதை முதன்முறையாக ஒப்புக்கொண்டது சீனா

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் சமீபத்தில் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதன்முறையாக சீன நாட்டு அதிகாரிகள் தங்களது நாட்டில் புலித்தோல் வர்த்தகம் நடைபெற்று வருவதை ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த மாநாட்டின் நிலைக்குழு கூட்டத்தில் புலி எலும்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றே சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாநாட்டு அமைப்பின் செயலகமும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

கிட்டத்தட்ட 5000 முதல் 6000 புலிகள் சீனாவில் கூண்டில் அடைபட்ட நிலையில் உள்ளன. இந்த நடைமுறையினால் உலகெங்கும் பல இடங்களில் புலிகள் வேட்டையாடப்படுவதாகவும், கடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு புலிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் சட்டவிரோத சர்வதேச வர்த்தகத்தில் நேரடி விலங்குகள் மற்றும் பாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. நீண்ட காலமாகவே இத்தகைய வர்த்தகத்தை நிறுத்துமாறு வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல் அறிக்கை ஒன்று சீனாவில் நடைபெறும் சர்வதேச புலித்தோல் வர்த்தகங்கள் பற்றிய விபரங்களை எடுத்துரைத்தது. இதனைத் தொடர்ந்தே சீன அதிகாரிகள் முதன்முறையாக இந்த வர்த்தகம் பற்றி ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும், இதனால் இந்த வர்த்தகத்தைத் தடைப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும் என்றும் சைட்ஸ் அமைப்பு நம்பிக்கை தெரிவிக்கின்றது.

தங்களது அறிக்கையில் வணிகரீதியாக சீனாவில் இந்த வர்த்தகம் நடைபெறுகின்றது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று வனவிலங்கு பிரச்சாரகரான ஷ்ருதி சுரேஷ் கூறினார். ஏனெனில் சீன அதிகாரி இதனைத் தனது ஒப்புதலில் கூறவில்லை. எனவே பின்னர் இந்த விற்பனை ஆய்வு நோக்கங்களுடனோ, அருங்காட்சியகப் பொருளாகவோ விற்பனை செய்யப்பட்டது என்று திரித்து கூறப்படுவதற்கு வாய்ப்புண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் மாதிரிகள் விற்பனையில் அவற்றின் உயிருக்கு சேதம் ஏற்படாத வகையில் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக