திங்கள், ஜூலை 07, 2014

கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது.
இதன்படி இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்த தொடக்க ஆட்டக்காரர் ஹஷிம் அம்லா 109 ரன்களும் (130 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் டிவில்லியர்ஸ் 75 ரன்களும் (70 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), டேவிட் மில்லர் 36 ரன்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

பின்னர் கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் குசல் பெரேரா (34 ரன்), தில்ஷன் (40 ரன்) ஓரளவு நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த போதிலும், அடுத்து வந்த வீரர்களில் சங்கக்கரா தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. மோசமான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்தனர்.

முடிவில் இலங்கை அணி 40.3 ஓவர்களில் 229 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சங்கக்கரா 88 ரன்கள் (84 பந்து, 9 பவுண்டரி) எடுத்தார். ஜெயவர்த்தனே (10 ரன்), கேப்டன் மேத்யூஸ் (13 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

தென்ஆப்பிரிக்க தரப்பில் இம்ரான் தார் 3 விக்கெட்டுகளும், ஸ்டெயின், மோர்னே மோர்கல், மெக்லரன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக