செவ்வாய், ஜூலை 08, 2014

ரெயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: எதிர்க்கட்சிகள் கண்டனம்

மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று தனது முதல் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்த ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், பொருத்தமற்றது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

“இந்த பட்ஜெட் ஒடிசா மாநிலத்திற்கு கவலை அளிப்பதாக உள்ளது. புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஒடிசாவில் இருந்து 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சரக்கு போக்குவரத்து வருவாய் இருந்தும், பெரும்பாலான பகுதிகளில் ரெயில் சேவை இல்லை” என்று பிஜு ஜனதா தளம் எம்.பி. பாய்ஜாயந்த் பாண்டா தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவும் பட்ஜெட்டை விமர்சித்துள்ளார். நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பட்ஜெட்டில் விடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டிய அவர், நிலுவையில் உள்ள பணிகளை முதலில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புல்லட் ரெயில் திட்டம் போன்ற திட்டங்கள் நான்கைந்து நகரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. அதே கண்ணோட்டத்தில் ஒவ்வொரு பகுதியையும் பார்க்க வேண்டும் என்றும் சரத் யாதவ் தெரிவித்தார்.

கட்டண உயர்வு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவு என்று இப்போதைய அரசு கூறியது. எனவே, விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தினார். 

இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.பி.யுமான அசோக் சவான் கூறினார். மும்பைக்கு சில அறிவிப்புகள் வந்துள்ளதைத் தவிர, மகாராஷ்டிர மாநிலத்தை முற்றிலும் மறந்துவிட்டதாக சவான் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக