திங்கள், ஜூலை 07, 2014

இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை: யுனெஸ்கோ

இந்தியாவில் ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் 57.8 மில்லியன் குழந்தைகள் நடுநிலைப்பள்ளிக்கே செல்லவில்லை என்ற தகவலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வரிசையில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது கவலைக்குரியதாக உள்ளது. அதே சமயம் நேபாள நாட்டின் பங்களிப்பு பாராட்டக்கூடியதாக உள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. அந்நாட்டில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் மட்டுமே. 

ஆப்பிரிக்க நாடான புருண்டியில் 2005ல் கல்வி கற்காதவர்களின் எண்ணிக்கை 54 சதவிகிதத்தை எட்டிய நிலையில், அந்நாடு கல்விக்கட்டணத்தை ரத்து செய்தது. அதன் பலனாக தற்போது அந்நாட்டில் 94 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா, நைஜர், நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் தான் கல்லாதவர் அதிகமாக உள்ளதாக அது மேலும் கூறியுள்ளது. 2010 முதல் 2012 ஆம் ஆண்டிற்கான இடைப்பட்ட காலத்தில் கல்விக்கு வழங்கும் உதவிகளை இந்திய அரசு நிறுத்தியதே இச்சரிவுக்கு காரணம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக