ஞாயிறு, ஜூலை 13, 2014

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: பலி 150 ஆக உயர்வு

பாலஸ்தீனத்தில் ஹமாஸ்  கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று 5–வது நாளாக இந்த தாக்குதல் தொடர்ந்தது.
அவை தவிர ஹமாஸ் அறக் கட்டளைகள், வங்கிகள் போன்றவைகளையும் குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது உடல் ஊனமுற்றோர் தங்கியிருந்த இல்லம் மீது குண்டு விழுந்தது. அதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.காஸாவின் மையப் பகுதியில் மசூதி உள்ளது.   அந்த மசூதி மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசியது. அதில் அந்த மசூதி இடிந்து சேதமடைந்தது.

நேற்று நடந்த குண்டு வீச்சில் மட்டும் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து சாவு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 45 பேர் காயம் அடைந்துள்ளனர். அதையடுத்து காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தகவலை காஸா சுகாதார அமைச்சக செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்–குய்திரா தெரிவித்துள்ளார். காயம் அடைந்த பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஹமாஸ் பதிலுக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி வருகின்றனர். தலைநகர் டெல் அவிவ் மீது 10 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக ஹமாஸ்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அத்தாக்குதலில் யாருக்கும் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.பாலஸ்தீனத்தில் வடக்கு காஸாவில் ராக்கெட் குண்டுகள் ஏவும் தளத்தை அழிக்கும் நடவடிக்கையில் 4 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அதில் அவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின்  இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.சபை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இருதரப்பு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இருவரும் 2012–ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக